"மன்ன! கேள்யான் மழவிடையார் மகிழுந் தீர்த்தக் குளங்கல்லத் துன்ன மமண ரங்கணைந்"தீ தறமன்" றென்று பலசொல்லிப் பின்னுங் கயிறு தடவுதற்கியான் பிணித்த தறிக ளவைவாங்கி என்னை வலிசெய்தியான்கல்லுங் கொட்டைப்பறித்தா" ரென்றியம்பி, | 16 | (இ-ள்.) மன்னகேள் - அரசனே நீ கேட்பாயாக; யான்....கல்ல - நான் இளமை பொருந்திய விடையினையுடைய இறைவர் மகிழும் தீர்த்தக் குளத்தைத் தோண்டி அகழ; துன்னும்....சொல்லி - நெருங்கும் அமணர்கள் அங்கு வந்து ஈது அறமன்று என்று பலவாறும் வாயினாற் கூறி; பின்னும்....என்றியம்பி - அதன்மேலும், கையாற் றடவி வழி காண்பதற்காக யான் கயிறு கட்டிய நடுதறிகளையும் பறித்து என்னை வன்மை செய்து யான் மண் கல்லுதற்கு வைத்திருந்த கொட்டையும் பறித்தார்கள் என்று சொல்லி, (வி-ரை.) மழவிடையார் மகிழும் - இறைவர் மகிழ்ந்து விழாக் கொண்டு வீற்றிருந்தருளும். துன்னும் அமணர் அங்கு அணைந்து - யான் ஒருவன் பணி செய்ய, அமணர் தொகுதியாய்க் கூடி வந்தனர் என்றும், அவர்கள் அங்கு வரவேண்டா நிலையினராயினும் வலிந்து இகலுக்காக வந்தனர் என்றும் குறித்தவாறு. விடையார்....கல்ல - என்றதனால் அது சிறு பணியாதலும், ஈது அறமன்று என்று பலசொல்லி - என்றதனால் சிவதருமத்தை அவர் இகழ்ந்தனர் என்பதும் குறிப்பிட்டவாறு; பல சொல்லி - என்றதனால் அவ்வாறு பல நிந்தை மொழிகளைக் கூறியதுவும், அவற்றை வாக்கினாற் சொல்லலும் ஆகாது என்பதும் போந்தபடி. பின்னும் - இகழ்ந்து நிந்தை பகர்ந்ததன்றி மேலும் தொடர்ந்து; வாங்கி - வலிந்து பிடுங்கி. வலி செய்து - வன்கண்மை செய்து. இயம்பி - மொழிந்தார் - என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
|
|