பாடல் எண் :3608

அந்த னான வுனக்கறிவு மில்லை யென்றார்; யானதனுக்
"கெந்தை பெருமா னருளால்யான் விழிக்கி லென்செய் வீ"ரென்க
‘இந்த வூரி லிருந்கிலோ' மென்றே யொட்டி னா;ரிதுமேல்
வந்த வாறு கண்டிந்த வழக்கை முடிப்ப" தெனமொழிந்தார்.
17
(இ-ள்.) அந்தனான....என்றார் - விழிக்குருடாகிய உனக்கு அறிவுமில்லை என்றார்கள்; யான்....என்ன - அதற்கு நான் எமது பெருமானருளினால் நான் கண் பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கூற; இந்த....ஒட்டினார் - இந்த ஊரில் பின்னை நாங்கள் இருக்கமாட்டோம் என்றே ஒட்டிக் கூறினார்கள்; இது....மொழிந்தார் என்றார் - இதுவே மேல் நிகழ்ந்தபடியாம்; இதன் உண்மை நிலை கண்டு இந்த வழக்கினை முடிப்பாயாக" என்று கூறினார்.
(வி-ரை.) முன்பாட்டிற் கூறியவை அமணர் செய்த சிவாபசாரம். இப்பாட்டிற் கூறுபவை அடியார்பால் அவர்கள் செய்த அபசாரம்.
அந்தனான....என்றார் - காரணமின்றி வலியவந்து ஒருவரை - அதன்மேலும் சிவன்பணி செய்யும் ஒருவரை - இகழ்ந்த செயல் என்பது.
எந்தை....ஒட்டினார் - அரசன் கண்டு தீர்க்கவேண்டிய வழக்கின் நிலையினை முடித்து எடுத்துக் கூறியபடி.
விழிக்கில் - கண் ஒளிபெற்றால். "நுங்கண் குருடாய்" (3600) என்று அமணர் கண்ணிழக்கக் கூறியதனை மேற்சூளுறவு கூறும் இடத்து எடுத்துக் கூறப்படுதலாற் பெறவைத்தார்; வேறு கூறவேண்டாத சிறுபொருளாதலின் இங்குக் கூறாது விடுத்தனர். ஒட்டினார் - ஒட்டுதல் - பந்தயம் வைத்து நிபந்தனை கூறுதல். "ஒட்டியே செய்வது" (2695).
கண்டு - ஒப்பநாடி வழக்கின் உண்மை கண்டு.
முடிப்பது - தகவொறுத்து நிறைவாக்குக.