அருகர் தம்மை யரசனுமங் கழைத்துக் கேட்க வதற்கிசைந்தார்; மருவுந் தொண்டர் முன்போக, மன்னன் பின்போய் மலர்வாவி அருகு நின்று விறற்றண்டி யடிக டம்மை முகநோக்கிப் "பெறுகுந் தவத்தீர்! கண்ணருளாற் பெறுமாகாட்டு" மெனப்பெரியோர், | 18 | (இ-ள்.) அருகர்....இசைந்தார் - அமணர்களை அரசனும் அவ்விடத்தே அழைப்பித்துக் கேட்க அவர்களும் அதனுக்கு இசைந்தார்கள்; மருவும்....நின்று - பொருந்திய தொண்டராகிய தண்டியடிகள் முன்னே செல்ல, அரசன் அவர் பின்னே சென்று கமலாலயக் குளத்தின் அருகில் நின்றுகொண்டு; விறல்....காட்டும் என - விறலுடைய தண்டியடிகளாரது முகத்தினை நோக்கிப் பெருகும் தவத்தினை உடையவரே! திருஅருளினாலே நீர் கண்பெறும் நிலையினைக் காட்டுவீராக! என்று கூற; பெரியோர் - பெரியவராகிய தண்டியடிகள். (வி-ரை.) அருகர்....இசைந்தார் - முன் "தொண்டர்பாற் சார்ந்து" (3606) என்றதும், இங்கு "அருகர் தம்மை அங்கு அழைத்து" என்றதும் ஆகிய வேறுபாடு கருதத்தக்கது. முறை சொல்வானும் முறை சொல்லப்பட்டானும் நீதி அரசன் முன்பு ஒன்று போலவே சாரவும் செலுத்தப்படவும் கடவர் என்பது அரச நீதி முறையாயிருப்பவும், இங்கு இவ்வேறுபாட்டினால் அரசன் நீதிமுறை கோடினான் என்ன வாராதோ? எனின், வாராது; என்னை? இறைவர் "அவன் பால் நீ மேவி" (3605) என்று கட்டளையிட் டருளப் பெற்றானாதலின் அரசனே அவர்பாற் செல்ல வேண்டியதாயினது நியதியாதலின் என்க; அன்றியும் ஈண்டுத் "திருவாரூர் காவல்கொண்டு தனியாளுங் கடவுட்பெருமா" னாராகிய தியாகராசர் திருவாயில் முன்பு தொண்டர் சென்று (3602) முறையிட்டுள்ளா ராதலின் அரச நீதிமுறை பிறழாமையும் கண்டுகொள்க. இராசாதி ராசராகிய தியாகராசரது ஆணையின் முறைவழியே அமைந்து முறை செய்யவுள்ளவன் நிலவேந்தனாதலின் ஆணைப்படி அவரது சேவகனாக இங்குத் தொண்டர்பால் வந்து சார்ந்தான். இதனால் திருத்தொண்டின் பெருமை உணர்த்தியவாறு மாயிற்று. அங்கு அழைத்துக் கேட்க - தம்முள் மாறுபட்டு வழக்கினுட்பட்ட இருதிறத்தவரையும் அரசன் தன் முன்னே எதிர் எதிர்நிறுத்தி அவ்வவர் வாய்மொழிகேட்டு முறைசெய்யும் நீதிமுறை பற்றியது. "அரசனுஞ் செய்வ தீச னருள்வழி" (சித்தி). அதற்கு இசைந்தார் - அதற்கு - தண்டியடிகள் கூறிய வழக்கின் நிலைக்கு; இசைந்தார்; வழக்கின் நிகழ்ச்சியின் உண்மையினை ஒப்பியதன்றி, எடுத்துக்கூறிய சூளுறவு நிலைக்கும் தமது இசைவினை அறிவித்தார். வழக்கு நிலைபெறுத்தி முடிக்கும் முறைகள் இரண்டு; (1) வழக்கு மேலிட்டணைந்த இருதிறத்தினரின் இசைவு இருக்குமாயின், அது உலகியல் நீதிக்குப் பொருந்துமாயின் அவ்வழியே முடித்தல் ஒன்று; இதனை Decision on admission என்பர் நவீனர். (2) அவ்வாறு இசைவு இல்லாத போது ஆட்சி - ஆவணம் - அயலார் காட்சி என்ற சான்று முறைகளை ஊன்றிக் கண்டு முடித்தல் மற்றொன்று. ஈண்டு அமணர்கள் வழக்கு நேர்ந்த நிகழ்ச்சியினையும் ஒப்பினார்; ஒட்டிய சூளுறவின்படி அரசன் கண்டு செய்யும் முடிவுக்கும் உட்பட உடன்பட்டனர். ஆதலின் அரசன் அவ்வாறே கண்டு முடிக்கும் நிலை காண்க. திருவாலவாயில் புனல் வாதத்தில் அமணர் ஒட்டி இசைந்தபடி முறை செய்த நிலை ஈண்டுக் கருதத்தக்கது; வழக்கு முடிக்கும் நீதிமுறை பற்றி முன்னர்த் தடுத்தாட்கொண்ட புராணத்துள் உரைத்தவை பார்க்க (197 - 209 பார்க்க.)1 தொண்டர் முன்போக - தாம் முறைபாடிட்டவ ராதலானும் திருவருள்பெற்ற திருத்தொண்டின் உறைப்பாகிய வீரத்தானும் தண்டியடிகள் முன் சென்றனர் என்க. தடுத்தாட்கொண்ட புராணத்திலும் வழக்குரைத்த வேதியர் தண்டூன்றி முன் சென்றமையும் ஏனையோர் அவர்பின் சென்றமையும் (195 - 196) கருதுக. மலர்வாவி - தண்டியடிகள் மண் கல்லி எடுத்த தீர்த்தக் குளமாகிய கமலாலயம். மன்னன் - திருவாரூர், சோழமன்னர் அரசு புரியும் தலைநகரங்களுட் சிறந்ததாதலின் சோழ அரசர் என்பது கருதப்படும்; திருநகரச் சிறப்புக் காண்க. முகநோக்கி - கண்காணாராதலின் முகநோக்கிக் கேட்கலாயினன். பெருகும் தவத்தீர் - பெருகும் - (3592) பெருமைத்தவம் என்ற முன்னைத் தவமும், திருவருளால் மேலும் பெருகவுள்ளது என்ற மேற்சரித விளைவுக்குறிப்பும் காண்க. இறைவரது திருவருளை அரசன் கனவில் உணர்ந்தானாதலின் இவ்வாறு கூறினான் என்க. நீர் அருளாற் கண் பெறுமா காட்டும் - என்க; ஆ - ஆறு என்பது கடை குறைந்து நின்றது. பெரியோர் - செயற்கருஞ் செயல் உலகறிய நிகழச் செய்யும் இடம் இதுவாதல் குறிக்க இப்பெயராற் கூறினார்; "செயற்கரிய செய்வார் பெரியர்" (குறள்). பெரியோர் - என்றே - ஓதி - மூழ்கினார் என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
|
|