"ஏய்ந்த வடிமை சிவனுக்கியா னென்னி லின்றென் கண்பெற்று வேந்த னெதிரே திருவாரூர் விரவுஞ் சமணர் கண்ணிழப்பார்; ஆய்ந்த பொருளுஞ் சிவபதமே யாவ" தென்றே யஞ்செழுத்தை வாய்ந்த தொண்ட ரெடுத்தோதி மணிநீர் வாவி மூழ்கினார். | 19 | (இ-ள்.) ஏய்ந்த....என்னில் - சிவனுக்கு யான் பொருந்திய அடியவனே யாகில்; இன்று....இழப்பார் - இன்று இவ்வேந்தனெதிரே யான் எனது கண் பெற்றுத் திருவாரூர் விரவும் சமணர்கள் கண்களை யிழப்பார்கள்; ஆய்ந்த....ஆவது என்றே - ஆய்ந்து துணிந்த முடிபாகிய பொருளும் சிவபதமேயாவதாம் என்ற சூளுறவு மொழிந்து; அஞ்செழுத்தை....மூழ்கினார் - திருவைந்தெழுத்தினை வாய்ந்த திருத்தொண்டர் எடுத்து ஓதி அழகிய நீர்வாவியினுள்ளே முழுகினார். (வி-ரை.) ஏய்ந்த - முன்பொருந்திய அடிமைத் திறத்தால் வந்தது; "தவமும் தவமுடையார்க் காகும்" (குறள்). என் கண் பெற்று - நான் என்ற எழுவாய் தொக்கு நின்றது. வேந்தனெதிரே - என்றதனை ஈரிடத்தும் கூட்டுக. திருவாரூர் விரவும் - முன்னின்றித் திருவாரூரில் புதிதாக வந்து புகுந்து உள்ள என்றது குறிப்பு. புதிதின் வந்தவராதலின் தமது தீச்செயல் காரணமாக அதனின்றும் துரத்தப்படவும் உள்ள நிலைக்குறிப்பு. __________________________________________________ 1. இவைபற்றி எனது சேக்கிழார் 64 - 73 பக்கங்கள் பார்க்க. ஆய்ந்த - பொருள் - வேதாகம முதலிய எல்லா ஞான நூல்களானும் ஆய்ந்து கண்ட முடிவான பொருள். சிவபதம் - திருவைந்தெழுத்து; வேதாகமங்களின் முடிந்த முடிபு எல்லாம் அதனுள் அடங்குதல் பெரியோர் வாய்க் கேட்டுணரத்தக்கது. சிவபதம் - சிவன் றிருவடி என்றலும் குறிப்பு. அஞ்செழுத்தை ஓதி - திருவருள் வெளிப்படும் நிலை காணும் செயலாதலின் அஞ்செழுத் தோதினார்; "தழைத்த வஞ்செழுத் தோதினா ரேறினார் தட்டில்" (544); "அஞ்செழுத்தோதி....பொய்கையின் மூழ்கினார்" (1635); "அஞ்செழுத்தோதி யேறினார்" (2114) என்பன முதலியவை பார்க்க. எடுத்து - உச்ச சுரத்தில் கூறி, உச்சாடன கர்மத்திற்கு இங்ஙனம் உரத்த சுரத்தில் காயிக முறையில் மந்திரங்களைச் செபித்தல் வேண்டும் என்பர். தமது புறக்கண்ணில் அந்தத் தன்மை நீங்கிக் கண் காணுதலும், அமணர் அந்தராதலும் உச்சாடன கர்மத்தின்பாற்படும். வரும் பாட்டிற் பார்க்க;- (இது சிவப்பிரகாசதேசிகர் குறிப்பு.) இன்னே கண் பெற்று - என்பதும் பாடம். |
|
|