பாடல் எண் :3611

தொழுதுபுனன்மேலெழுந்தொண்டர்தூயமலர்க்கண் பெற்றெழுந்தார்;
பொழுது தெரியா வகையமரர் பொழிந்தார் செழுந்தண் பூமாரி;
இழுதை யமணர் விழித்தேகண் ணிழந்து தடுமா றக்கண்டு
"பழுதுசெய்தவமண்கெட்ட"தென்றுமன்னன்பகர்கின்றான்;
20
(இ-ள்.) தொழுது....எழுந்தார் - இறைவரருளைத் தொழுது நீரின் மேல் எழுகின்ற தொண்டர் தமது தூய மலர்போன்ற கண்களின் ஒளிபெற்று எழுந்தார்; பொழுது....பூமாரி - ஞாயிற்றினை மறைத்தலால் பொழுது தெரியக்கூடாதபடி தேவர்கள் செழிய குளிர்ந்த (மந்தார முதலிய) தெய்வ தருக்களின் மலர்மாரி பொழிந்தனர்; இழுதை....கண்டு - அறிவில்லாத அமணர்கள் விழித்திருந்தபடியே தமது கண்களை இழந்து தடுமாறுதலைக் கண்டு; பழுது....பகர்கின்றான் - தீமை செய்த அமண் சமயம் கெட்டது என்று முடித்து அரசன் சொல்வானாகி;
(வி-ரை.) தொழுது - இறைவரருளைத் தொழுது கொண்டவாறே.
தூய மலர்க்கண் பெற்று - தூய - என்பது அவரது கண்களின் முன்னை நிலையினையும், மலர்க்கண் - என்றது அழகும் ஒளியும் பெற்ற பின்னிலையினையும் குறித்தன.
பொழுது - பொழுதினை - காலத்தினை - அறிவிக்கும் சூரியனைக் குறித்தது; ஆகுபெயர்.
இழுதை - அறிவில்லாதவர்களாகிய. "இழுதையர்க் கெளியே னலேன்" (பிள். தேவா).
விழித்தே கண் இழத்தல் - என்றது கண்கள் செவ்வே யிருப்பவே ஒளியிழத்தல்.
பழுது செய்த அமண் கெட்டது என்று - இஃது அரசன் நேரே கண்டு கூறிய முடிபு.
பகர்கின்றான் - முற்றெச்சம்; பகர்கின்றானாகி - என என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க.