பாடல் எண் :3612

"தண்டி யடிக டம்முடனே யொட்டிக் கெட்ட சமண்குண்டர்
அண்டர் போற்றுந் திருவாரூர் நின்று மகன்று போய்க்கழியக்
கண்ட வமணர் தமையெங்குங் காணா வண்ணந் துரக்க"வென
மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனங்கலங்கி,
21
(இ-ள்) தண்டியடிகள்....துரக்க என - தண்டியடிகளோடு ஒட்டித்தாமே கெட்ட சமணர்களாகிய கீழ்மக்கள், தேவர்கள் போற்றுகின்ற இத்திருவாரூரினின்றும் நீங்கிப் போய்க் கழியும்படிக் கண்டவிடத்தே அமணர்களை எங்கும் இனிக் காணாதபடி துரத்துக என்று சொல்ல; வயவர் மண்டிச் சாடுதலும் - வீரர்கள் நெருங்கிச் சாடியதனாலே; கண்கள் காணார் மனங்கலங்கி - கண்ணொளியிழந்தவர்களாகிய அவ்வமணர் மனங்கலங்கி.
(வி-ரை.) ஒட்டிக் கெட்ட - ஒட்டிச் சபதம் கூறியதனால் தங்களைத் தாங்களே கேடு செய்துகொண்ட.
அண்டர் போற்றும் திருவாரூர் நின்றும் - அகன்று - தேவர்களும் போற்றும் பெருமையுடைமையால் கீழ் மக்களாகிய இவர்கள் அங்கிருக்கும் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பு. அண்டர்களும் - எனச் சிறப்பும்மை தொக்கது.
கண்ட அமணர் காணாவண்ணம் சொல் அணிநயம்; முரண்டொடை; கண்ட - பல இடத்தும் இருக்கக்கண்ட; எங்கும் காணாவண்ணம் - எவ்விடத்தும் இல்லாதபடி.
துரக்க - இருக்கவொட்டாமல் ஓட்டுக.
வயவர் மண்டி என்க. மண்டி - நெருங்கி; கூடி; சாடுதல் - புடைத்தல்.
கண்கள் காணார் - கண் ஒளியிழந்தமையால் காண இயலாதவர்களாய்; சினை வினைமுதலுடன் முடிந்தது; காணார் - வினைப்பெயர்; முற்றெச்சமாகக் கொள்ளலுமாம்.
மனம் கலங்கி - விழுவாரும்....மயங்குவாரும் ஆயினர் என மேல்வரும் இரண்டு பாட்டுக்களுடனும் கூட்டி முடிக்க.