பாடல் எண் :3614

பீலி தடவிக் காணாது பெயர்வார்; நின்று பேதுறுவார்;
காலி னோடு கைமுறியக் கன்மே லிடறி வீழ்வார்கள்
சால நெருங்கி யெதிரெதிரே தம்மிற் றாமே முட்டிடுவார்;
மாலு மனமு மழிந்தோடி வழிக ளறியார் மயங்குவார்;
23
(இ-ள்.) வெளிப்படை. (தாம் கையில் ஏந்தும்) மயிற்பீலிக் கற்றையினைக் காணாது பெயர்ந்து செல்வார்களும். (செல்லாது) நின்று மயங்குவார்களும், மிகவும் நெருக்கமாகச் சென்று எதிரெதிரே தம்மில் தாமே முட்டிக் கொள்வார்களும், மயங்கும் மனமும் உடைந்து வழிகள் அறியார்களாய் மயங்குவார்களும் (ஆயினர்);
(வி-ரை) பீலி - மயிற்பீலிக் கற்றை; மயிற் பீலியினைக் கையிலேந்திச் செல்லுதல் அமணர் வழக்கு. இதனால் வழியில் எறும்பு முதலிய பிராணிகள் பட்டிறவாது வழி தடவிச் செல்வரென்ப. இங்கு ஊரைவிட்டுத் துரத்தப்பட்டு வழிச் செல்கின்றாராதலின் இதனை வேண்டினர் என்பது; தடவித் தேடி என்றதுமிது.
நின்று - பீலி காணாது பெயர்வார் சிலரும், அதனால் பெயராது நிற்பார் சிலரும் என்பதாம். பேதுறுதல் - செயலறியாது திகைத்தல்; பேது - பேதைத்தன்மை.
தம்மிற்றாமே முட்டிடுவார் - உடல் மோதுதலுடன் அறிவினான் மயங்கி ஒருவரையொருவர் மாறுகொண்டு கலாய்ப்பர் என்றலுமாம்; "கந்தியர் தம்மிற் றாமே கனன்றொழு கலாங்கள் கொள்ள வந்தவா றமணர் தம்மின் மாறுகொண் டூறு செய்ய" (2532); தண்டியடிகளுடன் கலாய்த்து ஒட்டி இவ்வாறு அரச தண்டனை விளைவித்தார் அவர்களுள் ஒருசிலரேயாக, அவர்களால் எல்லாருக்கும் நேர்ந்த துன்ப நோக்கி அவருள்ளே கலாய்த்தல் இயல்பாம்.
மாலும் - மயங்கும்; பெயரெச்சம். மனமும் - இவ்வாறு பலவும் சிந்தித்து வழிதேடுதற்குத் துணை காண மயங்கிய நிலையிலேனும் துணை காணும் கருவியாய் எஞ்சிநின்ற மனமும் உடைந்து மேலே சிந்திக்கவும் இயலாமல் என்று உம்மை சிறப்பும் எச்சமுமாம்.
வழிகள் - மேற்செயலாவன வழிகள்.