பாடல் எண் :3616

மன்னன் வணங்கிப் போயினபின் மாலு மயனு மறியாத
பொன்னங் கழல்கள் போற்றிசைத்துப் புரிந்த பணியுங் குறைமுடித்தே
உன்னு மனத்தா லஞ்செழுத்து மோதி வழுவா தொழுகியே
மின்னுஞ் சடையா ரடிநீழன் மிக்க சிறப்பின் மேவினார்.
25
(இ-ள்.) மன்னன்....பின் - முன்கூறியபடி அரசன் வணங்கி விடை பெற்றுச் சென்ற பின்னர்; மாலும்....போற்றிசைத்து - விட்டுணுவும் பிரமனும் அறியாத பொற்பாதங்களை வந்தித்து; புரிந்த....குறை முடித்தே - தாம் செய்த திருப்பணியின் குறையினை நிறைவாக்கிய பின்பே; உன்னும்....ஒழுகியே - இடைவிடாது நினைக்கும் மனத்தினால் திருவைந் தெழுத்தினையும் ஓதி இவ்வொழுக்கத்தில் வழுவாத நிலையின் நின்றபடியே; மின்னும்....மேவினார் - ஒளி வீசும் சடையினை உடைய சிவபெருமானது திருவடி நீழலாகிய மிகுந்த சிறப்பின்கண்ணே பொருந்தினார்.
(வி-ரை.) மன்னன் வணங்கிப் போயினபின் - பணிந்தான் என்று (3615) முன்கூறி, இங்கு வணங்கிப் போயின பின் என்றமையால் பணிந்து போயின நிகழ்ச்சி இடையில் நிகழ்ச்சி இடையில் நிகழ்ந்தது என்பது குறிப்பெச்சம்.
போற்றிசைத்தல் - ஈண்டு இறைவர் தம்பாற் செய்த பேரருளின் பொருட்டு நன்றியினால் வந்தித்துத் துதித்தலைக் குறித்தது.
புரிந்த பணியும் குறை முடித்தே - புரிந்த பணி - அமணர்களால் இடையூறு வருவதன்முன் ஒழியா முயற்சியா லுய்த்த பணி. (3596); குறை முடித்தல் - செய்ய நின்ற குறையினை நிறைவாக்குதல்; குறையாவது அப்போதைக்கு அளவுபடுத்திச் செய்த செய்கைகளை நிலைபெற நிறைவாக்க எஞ்சிநின்ற பணிகள். பணியும் - உம்மை உயர்வு சிறப்பு; அமண்வென்று தூய்மையாக்கியதன்றி என்று எச்சவும்மையுமாம்.
உன்னும்....ஓதி - அஞ்செழுத் தோதியவாறே பணிசெய்து; "ஓது மெழுத்தஞ் சுடனுய்ப்பார்" (3596).
வழுவாது ஒழுகியே - சிவநெறியில் இடையறாது ஒழுகி; வழுவுதல் - இடையறுதல். ஏகாரம் தேற்றம்.
அடிநீழல் மிக்க சிறப்பின் - அடி நீழலே சிறப்பு எனப்படுவது; எல்லாப் பேறுகளிலுஞ் சிறந்தமைபற்றி சிறப்பெனப்பட்டது. "சிறப்பென்னுஞ் செம்பொருள்" (குறள்).