பாடல் எண் :3617

கண்ணின் மணிக ளவையின்றிக் கயிறு தடவிக் குளந்தொட்ட
எண்ணில் பெருமைத் திருத்தொண்டர் பாத மிறைஞ்சி யிடர்நீங்கி
விண்ணில்வாழ்வார் தாம்வேண்டப்புரங்கள் வெகுண்டார் வேற்காட்டூர்
உண்ணி லாவும் புகழ்த்தொண்டர் மூர்க்கர்செய்கை யுரைக்கின்றாம்.
26
(இ-ள்.) கண்ணின் மணிகள்....இடர் நீக்கி - கண்ணின் மணிகளாகிய ஒளியின்றிக் கயிற்றினைத் தடவி வழிகண்டு சென்று திருக்குளத்தினைக் கல்லிய எண்ணில்லாத பெருமையுடைய திருத்தொண்டராகிய தண்டியடிகளது திருவடிகளை வணங்கி இடையூறு நீங்கப் பெற்று; விண்ணில்....உரைக்கின்றாம் - வானுலகில் வாழும் தேவர்கள் வேண்டுதலுக் கிரங்கி முப்புரங்களையும் எரித்த இறைவரது திருவேற்காட்டூரில் அவதரித்த உள்ளே பெருகும் புகழினையுடைய தொண்டராகிய மூர்க்கநாயனாரது திருத்தொண்டாகிய செய்கையினைச் சொல்லப்புகுகின்றோம்.
(வி-ரை.) இஃது ஆசிரியர் தமது முறையின்படி இதுவரை கூறிப்போந்த சரிதத்தினை முடித்துக்காட்டி, இனி வரும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்தவாறு.
கண்ணின் மணிகள் - கண்களுள் ஒளி செய்யும் கூறு கண்மணி யெனப்படும்.
கண்ணின்....குளந்தொட்ட - சரிதச் சுருக்கமும் சாரமுமாய் வடித்தெடுத்துக் காட்டியவாறு.
தொட்ட - தொடுதல் - தோண்டுதல்; கல்லுதல். "தொட்டனைத் தூறு மணற் கேணி" (குறள்)
எண்ணில் பெருமை - எண்ணத்தில் நிலவி நிற்கும் தன்மையுடைய பெருமை என்றலுமாம். (எண்-நில்)
இடர் நீங்கி - இடர் - இடையூறு; மேற் சரிதங் கூறுதற்கு வரக்கூடிய அறியாமை முதலிய அக இடர்களும், பிறரால் வரும் புற இடர்களுமாம்; இறைஞ்சி - இறைஞ்சுதலால் எனக் காரணங் குறித்தது; அவர் செய்த திருப்பணிக்கு விலக்காக வந்த இடையூறுகள் நீங்கித் திருப்பணி முற்றியவாறே அவர் சரிதங் கூறி எமக்கு அவரைப் பணிந்ததன் பயனாக - துணையாக - மேற்சரிதங் கூறும் பணியில் வரும் இடையூறுகள் நீங்கி எமதுபணியும் நிறைவேறும் என்பது இடர்நீங்கி’ - என்றதனாற் போந்த குறிப்பு.
உள் நிலாவும் புகழ் - சூது என்ற தன்மையாற் புறத்தில் இகழ்ச்சியாய்க் காணும் செயலே அகத்துள் அடியார் பணியாகிய புகழாக நிலவிற்று என்று சரிதக் குறிப்புப்பட நிற்பது காண்க.