பாடல் எண் :3618

மன்னிப்பெருகும்பெருந்தொண்டைவளநாடதனில்வயல்பரப்பும்
நன்னித் திலவெண் டிரைப்பாலி நதியின் வடபா னலங்கொள்பதி
அன்னப் பெடைகள் குடைவாவி யலர்புக் காட வரங்கினிடை
மின்னுக் கொடிக டுகிற்கொடிகள் விழவிக் காடு வேற்காடு.
1
(இ-ள்.) மன்னி....அதனில் - நிலைபெற்றுப் பெருகும் பெரிய தொண்டை வளநாட்டிலே, வயல் பரப்பும்....நலங்கொள் பதி - வயல்களில் பரப்புகின்ற நல்ல முத்துக்களை வீசும் அலைகளையுடைய பாலி ஆற்றின் வடகரையில் நன்மையுடைய பதியானது; அன்னப்பெடைகள்....புக்காட - பெட்டை அன்னங்கள் தாம் நீர்குடைந்தாடுகின்ற வாவிகளில் உள்ள தாமரை முதலிய பூக்களிற் புகுந்து நின்று ஆட; அரங்கினிடை....வேற்காடு - ஆடரங்குகளில் மின்னுக் கொடி போன்ற பெண்களும் துகிற் கொடிகளும் விழாக்களின்போது ஆடுதற்குரிய திருவேற்காடு என்பதாம்.
(வி-ரை.) வேற்காடு - பதி - என்று பெயர்ப் பயனிலை கொண்டு முடிந்தது.
மன்னி....பதி - நாட்டுச் சிறப்பும் நகரச் சிறப்பும் ஆற்றுச் சிறப்பும் உடன் கூறும் நயமும், அதனை, வளநாடு - நித்திலத்திரை நதி - நலம் கொள்பதி என்ற ஒவ்வோர் அடைமொழிகளாற் கூறும் நயமும் கண்டுகொள்க. வயல் பரப்பும் - 7ம் வேற்றுமைத்தொகை.
கொடிகள் விழவிற்கு ஆடுதல் - நகரத்தின் மங்கல அணிச்சிறப்பு.
பெருந் தொண்டை வளநாடு - பெருமையாவது வாய்மை வழுவாத நன் மக்களுடைமை; வளநாடு - அந்நாளில் நாடுகளின் பெயர் வழங்குமுறை.
நித்தில வெண்திரைப் பாலி நதி - பாலி நதியின் வெள்ளப் பெருக்கினால் நீர் தெளிவின்றி வருதல் சில நாட்களேயாய்த், தெளிந்து வருதலே பல நாட்களாதலின் அக்குறிப்புப்பட வெண் திரை - என்ற சிறப்புடன் கூறினார்.
நலங்கொள் பதி - நன்மையல்லாத சூதினையும் நன்மையாய்ச் செய்துகொண்ட நாயனார் அவதரித்த பதி என்பது நலங்கொள் என்றதன் குறிப்பு; "தாம்முன்பு கற்ற தன்மை நற்சூதால்" (3623) என்பது காண்க. நலங்கொள் - நன்மை மிக்க. "நலங்கொள் காழி" (பிள். தேவா).
குடைவாவி அலர்புக்கு - குடையும் வாவிகளில் உள்ள அலர்களின் மேற்புகுந்து என்று விரிக்க; குடைதல் - நீராடுதல்; "மாதரார் குடையும் பொய்கை."அன்னப் பெடைகள் அலர் புக்கு ஆட - தாமரைப் பூக்களில் ஏறியிருந்து அசைய - ஊசலாட; புகுதல் - நீரினுள் நீந்திச் சென்று பூக்களில் ஏறி; "சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலி கதிர்வீச, வீற்றிருந்த, வன்னங்காள்!" (தோணிபு - பழந்தக் - 6); "செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு மிலைக்குடைக்கீழ்ச் செய்யார் செந்நெல், வெறிகதிர்ச்சா மரையிரட்ட விளவன்னம் வீற்றிருக்கு மிழலையாமே" (மேகரா - 2.)
அன்னம் ஆட - கொடிகள் ஆடும் - அன்னங்கள் பொய்கைகளுள் வாவிகளாகிய நீரரங்கினிடை அலர் மேலாட, கொடிகள் நில அரங்கினிடை ஆடும் என்பது அணி நயம்.
மின்னுக் கொடிகள் - துகிற் கொடிகள் - மின்கொடி போன்ற பெண்களும், துகிற்கொடிகளும் என்று எண்ணும்மை விரிக்க. முன்னது உவமையாகுபெயர்; பின்னது பண்புத்தொகை.
விழவிற்கு ஆடும் - விழாவின் பொருட்டு ஆடுகின்ற; துகிற் கொடிகள் - வெண்கொடிகள்; "வீதித், தேரோடு மரங்கேறிச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே" (மேகரா - 6); "மாடந் தோறுங், கோதைசூ ழளகபாரக் குழைக்கொடியாட மீது, சோதிவெண் கொடிக ளாடுஞ் சுடர்நெடு மறுகில்" (474).
அலர்புக்காட - விழவிற்காடு - இச்சரிதமுடைய நாயனார் முதலில் இங்கு ஆடிப், பின்னர், விழவிற் குடந்தையிற் சூதாடிய சரிதக் குறிப்புப்பட நகர்வளங் கூறிய கவிநயம் காண்க. இஃது ஆசிரியரது சிறப்பு.
விழ - விற்காடு வேற்காடு - சொல்லணி.
வேற்காடு - வேலமரங்களின் அடர்ச்சி பற்றியும், முருகப்பெருமான் திருக்கை வேல்பற்றியும் வந்த பெயர். தலவிசேடம் பார்க்க.
புடை வாவி - என்பதும் பாடம்.