பாடல் எண் :3621

தூய வடிசி னெய்கன்னல் சுவையின் கறிக ளவையமைத்து
மேய வடியார் தமைப்போற்றி விருப்பா லமுது செய்வித்தே
ஆய பொருளு மவர்வேண்டும் படியா லுதவி யன்புமிக
ஏறு மாறு நாடோறு மினைய பணிசெய் தின்புற்றார்.
4
(இ-ள்) தூய.......அமைத்து - தூய்மையுடைய அன்னமும், நெய் - வெல்லம் - சுவையுடைய இனிய கறிகள் என்ற இவைகளும் நன்கு அமையச் செய்து; மேய....செய்வித்தே - வந்து பொருந்திய அடியார்களை உபசரித்து முகமன் கூறி விருப்புடனே அமுது செய்வித்தே; ஆய...உதவி - ஆகிய ஏனைப் பொருள்களையும் அவ்வடியவர்கள் வேண்டியவாறே உதவி; அன்புமிக.... இன்புற்றார் - அன்பு மிகவும் பொருந்தும்படி நாள்தோறும் இத்தகைய பணியினைச் செய்து இன்பமடைந்தார்.
(வி-ரை) தூய - என்றதனை ஏனையவற்றுடனும் கூட்டியுரைக்குமாறு முதலில் வைத்தார்.
சுவையின் களிகள் - சுவை - அறுசுவை; இன் - இனிய;
ஆய பொருள் - ஆய - அவர்களுக்கு விருப்பமாகிய; பொருள் - துகில் - பொன் முதலியன. மிக ஏயுமாறு - மிகவும் பொருந்தும்படி. ஆய - தம்மிடம் உளவாகிய.
பணி செய்து இன்புற்றார் - பணி செய்தலின்கண் அது கண்டு இன்புறும் தன்மையே வேண்டப்படுவது; "அமுது செய்யப்பெற்று இங்கு அவர்தம் மலர்ந்த முக நன்று காண்பது" (சிறுத்-புரா. 57)."ஈத்துவக்கு மின்பம்"(குறள்).