பாடல் எண் :3622

இன்ன செயலி னொழுகுநா ளடியார் மிகவு மெழுந்தருள
முன்ன முடைமை யானபொருண் முழுது மாள வடிமையுடன்
மன்னு காணி யானநில மற்று முள்ள திறம்விற்றே
அன்ன மளித்தே மேன்மேலு மாரா மனத்தா ராயினார்.
5
(இ-ள்) இன்ன....நாள் - இவ்வாறாகிய செய்கை செய்து ஒழுகி வரும் நாளில்; அடியார் மிகவும் எழுந்தருள - அடியார்கள் மிகுதியாக எழுந்தருளியபடியினாலே; முன்னம்...விற்றே - முன்னே தமது உடைமையாயின பொருள்கள் முழுதும் தீர்ந்துபோக, அடிமைகளுடனே நிலைபெற்ற காணியான நிலமும் மற்றும் உள்ள திறங்களை எல்லாமும் விற்றே; அன்னம் அளித்தே - அன்னம் அளித்தலை விடாது செய்தே; மேன்மேலும்....மேலும் மேலும்; ஆரா மனத்தார் ஆயினார் - ஆசை நிறைவு பெறாத மகிழ்ச்சி மிக்க மனத்தையுடையவராயினார்.
(வி-ரை) அடியார் மிகவும் எழுந்தருள - நாளும் மேன்மேலும் பெருகிய எண்ணிக்கையாக அடியார்கள் எழுந்தருளியதனாலே; உடைமைகளை விற்றும் அன்னமளிக்க நேர்ந்ததற்குக் காரணங் கூறியபடி.
முன்னம் உடைமையான பொருள் முழுதும் மாள - சேமநிதிகளும் தம் முன்னோர் தேடி வைத்தனவும் ஆகிய பொருள்கள் முழுதும்; இவை நேரே செலவு செய்ய நின்றன; ஆதலின் வேறு பிரித்து மாள என்று ஓதினார்; பின் வருவன அவ்வாறன்றிப் பிறர்பால் விற்றுப் பொருளாக மாற்றி அன்னமளிக்க உதவுவன; ஆதலின் அவற்றைப் பின்வைத்து வேறு பிரித்து விற்றே என்றோதினார். தம் வசம் பொருளாக உள்ளனவற்றைத் தாமே முன்னர்ச் செலவிட்டும், பின்பே அவ்வாறல்லாதவற்றை விற்றுச் செலவிட்டும் நிகழ்தல் உலக இயல்பாம் என்பது. உடைமை - சொந்தம்; மாள - செலவாகிவிட.
மற்றும் உள்ள - இவை அணிகலன் - ஆடை முதலிய சங்கமப் பொருள்கள். மற்றும் - நிலமல்லாதன எல்லாம்; திறம் - தாவரமும் சங்கமமு மல்லாத பிற உரிமைகள் முதலியவை எல்லாம் அடங்கத் திறம் என்றார். காணி - வழிவழி உரிமை.
விற்றே அளித்தே - விற்றே - ஏகாரம் விற்றேயும் எனச் சிறப்புக் குறித்தது; ஏகாரம் பின்னது தேற்றம்.
ஆரா மனத்தார் - ஆர்தல் - நிறைதல்; ஆரா மனம் - பொருள் எல்லாம் விற்றேயும் அமுதூட்டியும் நிறைவு பெறாது - அமையாது - மேலும் செய்ய விருப்பமுடைய மனம்.
ஆயினார் - ஆக்கச் சொல் தன்மை மிகுதல் குறித்தது.