அங்க ணவ்வூர் தமக்கொருபற் றடியார் தங்கட் கமுதாக்க எங்குங் காணா வகைதோன்ற விலம்பா டெய்தி யிருந்தயர்வார் தங்கம் வகையாற் றாமுன்பு கற்ற தன்மை நற்சூதாற் பொங்கும் பொருளாக் கவுமங்குப் பொருவா ரின்மை யினிற்போவார். | 6 | (இ-ள்) அடியார் தங்கட்கு அமுதாக்க - அடியார்களுக்கு அமுதாக்குதற்கு; அங்கண்....பற்று - அந்நாளில் அவ்வூரில் தமக்கு எவ்விதமாகிய பற்றுக்கோடும்; எங்கும்.......அயர்வார் - எங்கும் பெறாத நிலை வெளிப்பட வறுமை சார்ந்து இருந்து மயங்குவாராய்; தங்கும் ....ஆக்கவும் - மறவாது தம்மிடத்தில் தங்கியிருக்கும்படி தாம் முன்னாளில் கற்ற நற்றன்மையுடைய சூதினாலே மிகும் பொருள் ஆக்க முயற்சித்தும்; அங்குப்..போவார் - அங்குச் சூதாட்டம் செய்வாரில்லாமையால் வெளியே செல்வாராகி; (வி-ரை) அமுதாக்கத் தமக்கு அங்கண் அவ்வூர் ஒரு பற்றும் எங்கும் காணாவகை தோன்ற - என்க. அமுதாக்க ஒரு பற்றும் காணாமையாவது அமுதாக்குதற்குரிய சாதனங்கள் எவையும் பெறாதநிலைமை. ஒரு பற்றும் - முற்றும்மை தொக்கது. அங்கண் - அப்போது - அக்காலத்தில். பற்று - பற்றுக்கோடு. இலம்பாடு - வறுமை; பாடு - தொழிற் பெயர் விகுதி. இலம் - இல்லாநிலை. தங்கும் வகையால் தாம் முன்பு கற்ற தன்மை நற்சூது - தங்கும் வகையாவது மறவாது மனத்துள் நிலைபெறப் பயிலுதல்; முன்பு கற்ற தன்மை - இளம்பிராயத்தில் கலை ஞானங்களுள் ஒன்றாகத் தன்மை தெரியக் கற்ற; முன்பு என்றதனால் கற்றபின்பு அதனை ஊதியப் பயன்படச் செய்யவில்லை என்பது போதரும். நற்சூது - சூது என்ற தீமை அணுகாது முன்பு கலைஞான அளவுபெரும் அறிவினுக்கும், பின்பு சிவனடியார்க் கமுதுக்கும் ஆக்கவுமே பயன்படுத்தியமையால் நல் என்ற அடைமொழி தந்தோதினார். "கற்ற சூதன்" (நம்பி-தேவாரம்) என்ற முன்னூற் சொல்லும் பொருளும் எடுத்தாண்டமை காண்க."கற்ற சூதால்" (3624) எனவும், "நற்சூதாரம்" (3629) எனவும் மேல்வருவனவும் காண்க. ஐம்பெரும் பாதங்களுள் ஒன்றாக வைத்தெண்ணி விலக்கப்படும் சூதுதானும் சிவனடியார்களுக்குப் பயன்பட்ட வகையால் நல்லதாக ஆயினமை கண்டு கொள்ளத் தக்கது நளன் கதை - பாரதக் கதை முதலியவை ஈண்டு வைத்து வேற்றுமை கண்டு கொள்ளத் தக்கன. பொங்கும் பொருளாக்கவும் - சூதினால் ஒரோர் வழி வரும் ஊதியப் பொருள்களின் மிகுதி நோக்கியே மக்கள் சூதினில் ஆசைப்பட்டு மயங்கித் தம் பொருள் எல்லாம் இழந்து கேடுறவும் முற்படுகின்றாராதலின், முதலிற், பொங்குவதாகக் காட்டும் என்றும், கெட்ட ஆசை பொங்கும் என்றும் பல்லாறு உரைக்கப் பொங்கும் என்றார். இந்நாளில் திட்டச் சீட்டு - குதிரைப் பந்தயம் - பணையம் முதலாகிய பலவகைப் பகட்டுச் சூதுகளுள்ளே அறிவிழந்து மயங்கிப் பெருநிலையினர் என்னும் மாக்களும் உழலும் தன்மை காணப்படுதல் மிக வருந்தத் தக்கது; ஆக்கவும் - ஆக்க முயன்றும் என்ற பொருள் தந்து நின்றது. அங்குப் பொருவாரின்மையில் - "தீய வென்பன கனவிலு நினைவிலாச் சிந்தைத், தூய மாந்தர்வாழ் தொண்டைநாட் டியல்பு" (1123) என முன்னர்க் கூறிவிடுத்தாராகலின்அந்நாட்டிற் பணையத்துக்குச் சூதுபொருவாரின்மை என்று கூறிய அளவிலமைந்தார்; "தெண்ணீர் வயற்றொன்டை, நன்னாடு சான்றோ ருடைத்து" என்ற தனிப்பாடலும் காண்க. ஆயின் இந்நாயனார் அங்கு அதனைப் பயின்றனரே? எனின், அது கலைஞானங் கற்குமளவே என்பது முன் உரைக்கப்பட்டது. போவார் - அங்குநின்றும் நீங்கி வேற்றூர்களிற் போவாராய். அயர்வார் போவார். -முற்றெச்சம்; அயர்ந்து போவாராய். சென்று எய்தி - என மேல்வரும் பாட்டுடன் கூட்டுக. |
|
|