பெற்ற மேறிப் பலிக்குவரும் பெருமா னமருந் தானங்கள் உற்ற வன்பாற் சென்றெய்தி யுருகு முள்ளத் தொடும்பணிந்து கற்ற சூதா னியதியாங் கரும முடித்தே கருதாரூர் செற்ற சிலையார் திருக்குடந்தை யடைந்தார் வந்துசிலநாளில். | 7 | (இ-ள்) பெற்றம்......தானங்கள் - இடபத்தில் ஏறிக்கொண்டு "அஞ்சொலீர்! பலி "என்று கேட்டு எழுந்தருளிவரும் இறைவர் விரும்பியிருக்கும் பலபகுதிகளிலும்; உற்ற.....பணிந்து - பொருந்திய அன்பினாலே போய்ச் சேர்ந்து உருகும் மனத்துடன் வணங்கி; கற்ற...முடித்தே - தாம் கற்ற நற்சூதினால் வரும் பொருளினைக் கொண்டு நியதியாகிய தமது கருமத்தினை முடித்துக் கொண்ட வாறே; கருதார் ஊர்..சிலநாளில் - பகைவர்களது முப்புரங்களை அழித்த வில்லினையுடைய இறைவரது திருக்குடந்தைப் பதியினைச் சிலநாளில் வந்து அடைந்தனர் (வி-ரை) தானங்கள்....பணிந்து அடியார்க் கமுதாக்க ஒருபற்றுக் கோடுமில்லாமையாலும், அங்குத் தாம் கற்றறிந்த சூதினால் அதற்கு ஊதியம் பெற இயலாமையானும் வேற்றூர் தேடிப் புறப்பட்ட இந்நாயனார், சிவனுறையும் பதி பலவும் அன்புடன் சென்று பணிந்தனர் என்க. சூதினாற் பொருளாக்கும் கருத்தன்றி எவ்வாற்றானும் அடியாரைப் பேணும் அன்பினாற் சென்றார் என்பது சிவன் பதிகளிடைச் சென்று அன்புடன் பணிந்தனர் என்றதனாற் பெறப்படும். அன்பால் - அன்புடனே; ஆல் - ஓடு உருபின் பொருளில் வந்தது. கற்ற சூதால் நியதியாங் கருமம் முடித்தே- நியதியாம் கருமமாவது முன்(3620) உரைத்தவாறு, "காத லடியார்க் கமுதாக்கி யமுது செய்யக் கண்டுண்ணும் நீதி முறை வழுவாத நியதி" என்றபடி, அடியார்க் கமுதாக்கி அவரை முன் ஊட்டிப் பின் தாம் உண்ணுதல்; மாகேசுர பூசை; கற்ற சூதால் முடித்தே - அங்கங்கும் சூது பொருது அதனால் வரும் பொருள் கொண்டு நிறைவேற்றி. இந்நாளினும் பல பகுதிகளுள் திருவிழாக் காலங்களில் மக்களை மயக்கும் சூதுவகையுட்படப் பலப்பல ஆட்டங்கள் நிகழக் காணுதல் இதன் வழிவழி வந்த வழக்கம் போலும்; இத் தகாத செயல்கள் நமது இறைவர் திருவிழாக்களைப் பழுது படுத்தாது ஒழிக்கப்படுதல் வேண்டுமென்று அன்பர் பலரும் கருதுதல் தகுதியேயாம். ஆனால் இதுபற்றி நாம் சிற்திக்க வேண்டிய செய்திகள் சில உண்டு; உலகில் நன்மை தீமை என இரண்டும் உண்டு; இரண்டும் சிவன் படைப்பினுட் பட்டவை; இவை உயிர்கள் தத்தம் கன்மங்களைப் அனுபவித்துக் கழித்துப் பண்படுவதற்காக இறைவர் படைத்தவை, உயிர்களின் பக்கவத்துக் கேற்ப அனுபவிக்கச் செய்தற்பொருட்டு இவையிரன்டும் வேண்டத்தக்கன. "மெய்ம்மையும் பொய்ம்மையு மாயி னார்க்குச்,சோதியுமாயிரு னாயி னார்க்குத் துன்பமுமாயின்ப மாயினார்க்கு.....பந்தமு மாய்வீடு மாயினாருக்கு"(திருவா);"நன்மை தீமை நின்செய லாதலின், நானே யமையு நலமில் வழிக்கே" (பட்டினத்தார்); என்பவாதலின், சூது, முதலிய தீமைகள் தீயோர்களை அனுபவத்தினால் பக்குவப்படுத்துதற்கு இறைவர் வகுத்தவை; கைக்கும் மருந்தும் குற்றப்பட்டாரைச் சீர்திருத்தும் பள்ளிக்கூடங்கள் போல்பவையுமாம் எனவாம். பலதிறப்பட்ட பக்குவபேதமுடைய உயிர்கள் உள்ள அளவும் நன்மையும் தீமையும் உலகில் இறைவராணைவழி இருந்தே தீரும். பக்குவபேதம் கருதாது யாவரையும் ஒன்று போலவே நலப்படுத்தி விடுவோம் என்று கூறுதலும் முயலுதலும் மடமையின் பாலதாகும். இறைவ ராணைவழி நின்றாலன்றி, ஒரு தீமையை நீக்கி எல்லாவுயிரையும் ஒன்றுபோல நலப்படுத்துவோமெனப்புகின் முன்பு புலப்படாத மற்றொரு தீமை அம்முற்சியினின்றும் வெளிப்பட்டுத் தோன்றும். உலகில் ஏனை யிடங்களில் பயிலும் சூது வகைகளுக்கும் தலங்களிலும் விழாக்களில் பயில்வனவற்றுக்கும் வேறுபாடுண்டு; ஏனையிடங்களில் சூது பயில்வோர் அதனுட்பட்டே ஒழிந்து விடுவர்;ஆனால் தலங்களில் விழாக்களில் சூது பயில்வோர் அவ்வாறன்றித் தூய தலங்களின் நினைவும், விழாக்களின் நினைவும், அடியவர் நினைவும் , ஆண்டவன் நினைவும் காட்சியும் அபுத்திபூர்வமாயேனும் ஓரோர் கால் வரப்பெறும் நல்லூழ் வாய்க்கப் பெறுகின்றார்கள்; ஆதலின் அதன்மூலம் உய்தி பெறும் வழியில் நிற்கின்றார்கள்; இவ்வாறுள்ள ஊழிற்பட்டுச் சூதர் கூட்டத்தினின்றும் முகந்தெடுக்கப்பட்டவர்களே தலங்களிலும் விழாக்களிலும் சூது பயில்பவர்கள் என்பதும் கருதுதல் வேண்டும்; ஆனால் இவ்வாறு சூது முதலியவற்றாலும் நலப்படுத்தும் தலங்கள் சிலவே என்க. கருதார் - (சிவனினைவில்லாத) பகைவர்களாகிய முப்புரவாணர். சில நாளில் வந்து திருக்குடந்தை அடைந்தார் - என்க. திருக்குடத்தை அடைந்தார் - திருக்குடந்தை அந்நாளிலும் சூதாட்டம் முதலிய வற்றாலும் சிறந்தது விளங்கிற்றுப்போலும்; அது பற்றிய இந்நாள் விளக்கம் முன்னை வழிவழி வந்த வழக்கும் போலும். இதனைப் பற்றி மேல்வரும் பாட்டில் "பொருளாய மெய்துதற்குப் புகழ்க்குடந்தை யம்பலத்தே, யுருளாய்ச் குதாடி" (3625) என்னும் கருத்தும் கருதத் தக்கது. கடனு முடித்தே - என்பதுத் பாடம். |
|
|