முற்சூது தாந்தோற்று முதற்பணய மவர்கொள்ளப் பிற்சூது பலமுறையும் வென்றுபெரும் பொருளாக்கிச் சொற்சூதான் மறுத்தாரைச் சுரிகையுரு விக்குத்தி நற்சூதர் மூர்க்கரெனும் பெயர்பெற்றார் நானிலத்தில் | 9 | (இ-ள்) முற்சூது...கொள்ள - முதல் ஆட்டத்தில் தாம் தோல்வியை ஏற்று முதற்பந்தயப் பணத்தை ஒட்டினவர் கொள்ளச் செய்து; பிற்சூது ....ஆக்கி - பின்பு ஆடும் சூதாட்டத்தில் பலமுறையும் தாமே வென்று பெரும் பொருளைத் தம்மதாக்கி; சொற்சூதால்....நானிலத்தில் - வஞ்சச் சொற்களால் மறுத்தவர்களை உடைவாளுருவிக் குத்தி, நற்சூதராகிய இந்நாயனார் நானிலத்தில் மூர்க்கர் என்னும் பெயர் பெற்றனர். (வி - ரை) முற்சூது - முதல் ஆட்டத்தில் 7ம் வேற்றுமைத் தொகை. தாம் தோற்று - தாமே தோல்வியை ஏற்று; தோல்வியைக் காட்டி; பணயம் - பந்தயப் பொருளை. அவர் - எதிராக ஆடுவோர்; பலரறி சுட்டு. பிற்சூது - பின்பு ஆடும் ஆட்டங்கள். முற்சூது....ஆக்கி - இது சூதாட்டத்திற் கைதேர்ந்தோர் செய்யும் முறை; தோற்று - தோல்விப் பட்டார்போற் காட்டி; முதலிற் சிறு பொருளின் வெற்றிதந்து ஆசைகாட்டி அவ்வாசை காரணமாக அவர் கைப்பொருளினைப் பலமுறையும் இழக்கச் செய்தல் சூதின் நுட்பங்களுள் ஒன்று. ஆக்கி - விருத்தியாக்கி. சொற்சூதால் மறுத்தாரை - சூதுச் சொல்லால் மறுத்தார்களை என்பது; இங்குச் சூது என்பது வஞ்சச்சொல் என்ற பொருளில் வந்தது. நற்சூதர் - "நற்சூதால்." (3623); மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் - மூர்க்கர் என்பது இந்நாயனாருக்குக் காரணப்பெயர். நற்சூதர் என்றும், மூர்க்கர் என்றும் வழங்கப்படும் பெயர்களைப் பெற்றார்; "கற்ற சூதன்" (நம்பி. தேவா) நற்சூதால் - என்பதும் பாடம். |
|
|