சூதினில்வென் றெய்துபொருள் துரிசற்ற நல்லுணர்விற் றீதகல வமுதாக்கு வார்கொள்ளத் தாந்தீண்டார் காதலுட னடியார்க ளமுதுசெயக் கடைப்பந்தி ஏதமிலா வகைதாமு மமுதுசெய்தங் கிருக்குநாள், | 10 | (இ-ள்) சூதினில்....தீதகல - (முன் கூறியவாறு) சூதாட்டத்தினில் வெற்றிக்கொண்டு பொருந்தும் பொருள் குற்றமற்ற நல்லுணர்வின் பயனாகத் தீமை நீங்க; அமுதாக்குவார்....தீண்டார் - தாம் கையாலும் தீண்டாது அமுது ஆக்குவோர்கள் கைக்கொள்ளச் செய்து; காதலுடன்....அமுது செய்து - பெருவிருப்பத்துடனே அடியார்கள் அமுது செய்ய அதன்பின்பு குற்றமில்லாதவகையால் கடைப்பந்தியில் இருந்து தாமும் அமுதுசெய்து; அங்கு இருக்கும் நாள்- அப்பதியில் தங்கியிருக்கும் நாள்களிலே, (வி-ரை) சூதினில் வென்று - முன் கூறியவாறு ஆடிய சூதில்வென்று; இங்குச் சூது என்றது சூதாட்டம் என்றும், முற்சூது தோற்று, பிற்சூது பலமுறையும் வென்று என்றவை சூதுத்தந்திரம் என்றும் பொருள்பட நின்றன. துரிசற்ற நல்லுணர்வில் தீதகல - துரிசு - சூது முயல்வதனால் வரும் குற்றமும், சூதின்வரும் பொருளை அனுபவிப்பதனால் வரும் குற்றமும்; அற்ற அறுதற்கேதுவான; அறுவித்த என்க. உணர்வில் - உணர்வினாலே; தீது முன்சொன்ன துரிசு; அகல - அகலும்படி. பொருள் - பொருளை; 2-ம் வேற்றுமைத்தொகை. அமுது ஆக்குவார்....தீண்டார் - சூதின் வந்த பொருளினைத் தாம் கையாற் றீண்டுதலும் செய்யாராகி; அதனை முழுதும் அந்நிலையினின்றவாறே திருவமுது ஆக்குவோர் கைக்கொள்ளச் செய்து; அவர் கைக்கொள்ளுதல் அமுதாக்குதற்குரிய பண்டங்கள் பெறுதற் பொருட்டு. ஏதமிலா வகை கடைப்பந்தி தாமும் அமுது செய்து என்க. ஏதமாவது - சூதின் வந்த பொருளினால் உண்டு உயிர் வாழ்தல்; கடைப்பந்தி - அடியார்கள் எல்லாம் அமுது செய்தபின் இறுதியில் உண்போர் வரிசை; இதனால் ஏதல் இல்லா வகையாவது அடியார் உண்ட சேடம் உண்பதனாலும், அவர்க்கு அமுது ஆக்கும் பணி செய்யத் தாம் உளராதற் பொருட்டு உண்பதனாலும் கடைப்பந்தி அமுது செய்தலால் ஏதம் இல்லையாகும். அங்கு இருக்கும் நாள் - உலகை விட்டபின் - புரம் புக்கார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. அங்கு - திருக்குடந்தைப் பதியிலே; எனவே இந்நாயனார் தொண்டை நாட்டில் திருவேற்காட்டூரில் அவதரித்துச் சோழநாட்டிலே திருக்குடைந்தையில் இறைவன் திருவடி சேர்ந்தருளினர் என்க. |
|
|