பாடல் எண் :3628

நாதன்ற னடியார்க்கு நல்லடிசி னாடோறும்
ஆதரவி னாலமுது செய்வித்தங் கருளாலே
ஏதங்கள் போயகல விவ்வுலகை விட்டதற்பின்
பூதங்க ளிசைபாட வாடுவார் புரம்புக்கார்.
11
(இ-ள்) நாதன்றன்......அமுத செய்வித்து - தலைவராகிய சிவபெருமானுடைய அடியவர்களுக்கு நல்ல திரு அமுதினை நாடோறும் அன்போடும் அமுது செய்வித்து; அங்கு...போயகல - அங்குத் திருவருளினாலே குற்றங்கள் நீங்கப் பெற்றதனால்; இவ்வுலகை....புரம்புக்கார் - இவ்வுலகை விட்டபின்பு பூதகணங்கள் சூழ்ந்து இசைபாட ஆடுகின்ற சிவபெருமானது உலகமாகிய சிவபுரத்தினிற் புகுந்தமர்ந்தனர்.
( வி - ரை) நல் அடிசில் - முன் (3621) கூறியவை.
ஆதரவு - மிக்க அன்பு.
அருளாலே ஏதங்கள் போயகல - சிவனருள் வழிநின்று தாமற்ற தன்மையாலே சூதினால் வரும் தீமைகள் தாக்காதொழிய, உடலுடன் வந்த ஏதங்கள் என்றலுமாம்.
அருளாலே - தனக்கென்று செயல் ஒன்று மில்லாது ஏகனாதி இறைபணி நிற்கும் அடியவர் செய்கைகளைத் தம் செயலே யாக்கி, அச்செயல்களால் வரும் துரிசுகளை அவர்பாற்சாராமற் செய்வது இறைவர் அருளாம். பாதகங்கள் செய்திடினும்.....நெறியல்லா நெறி பயிற்றிவரினும் - தவறுகள் வந்திடினும், தனக்கெனவோர் செயலற்றுத் தானதுவாய் நிற்கில், நாதனவ னுடலுயிரா யுண்டுறங்கி நடந்து நானாபோகங்களையுந் தானாகச் செய்து, பேதமற நின்றிவனைத் தானாக்கி விடுவன்"(உண்மை நெறி விளக்கம்-6) என்பது முதலிய சிவாகமத் திருவாக்குக்கள் காண்க.
பூதங்கள் - இசைபாட ஆடுவார் - இறைவன் றிருக்கூத்துக் கிசையச் சிவபூதங்கள் பாடியும் முழக்கியும் ஆடியும் பயில்வன என்பது; புரம் - சிவபுரம்.
இவ்வுலகை விட்டதற்பின் - புரம்புக்கார் - இவ்வுலக வாழ்வு நீத்தவுடன் வேறு பிறவியிற் சேராது சிவனுலக வாழ்விற் றலைப்பட்டு நின்றார் என்பது.