சூதம்பயி லும்பொழி லம்பரிற் றூய வாய்மை வேதம்பயி லும்மறை யாளர் குலத்தின் மேலோர் ஏதம்புரி யும்மெயில் செற்றவர்க் கண்பர் வந்தாற் பாதம்பணிந் தாரமு தூட்டுநற் பண்பின் மிக்கார். | 1 | (இ-ள்) சூதம்...அம்பரில் - மாமரங்கள் மிக்கு விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருவம்பர் நகரின் கண்ணே; தூய வாய்மை....மேலோர் - தூய்மை செய்யும் வாய்மையுடைய வேதங்களைப் பயிலும் மறையவர்களது குலத்தில் மிக மேம்பட்டு விளங்குபவர்; ஏதம்....வந்தால் - உலகுக்குக் கேடுசெய்த மும்மதில்களையும் எரித்த இறைவருக்கு அன்பர்கள் வந்தால்; பாதம்....மிக்கார்-அவர்களது திருவடிகளிற் பணிந்து திரு அமுதூட்டுகின்ற நல்ல பண்பில் மிகுந்தவர்,. (வி-ரை) சூதம் பயிலும் பொழில் - "சூதப்பொழி லம்பரில்" என்ற வகை நூலின் (திருவந்தாதி) சொல்லும் பொருளும் விரித்துப் போற்றப்பட்டது; பயிலுதல் - மிகுதல்; சூதம் - மா. தூய வாய்மை வேதம் பயிலும் மறையாளர் - மறையாளர் என்றலே அமையுமாயினும் இவ்வாறு கூறியது பிறப்பினளவா னன்றி வேதப்பயிற்சி ஒழுக்கத் தானும் மிக்கவர் என்று குறிப்பதற்கு. ஏதம் புரியும் எயில் செற்றவர் - ஏதம் - உலகுக்குக் கேடு; ஏதம் புரிந்தமையால் அந்த ஏயில்களைச் செற்றவர் எனக் காரணக் குறிப்புடன் நின்றது. ஆர் அமுது - ஆர்தல் - தூய்மை - சுவை - பண்பு முதலியவற்றாலும், அன்பினாலும் நிறைவுடையதாதல்; இத்தன்மைகள் இளையான்குடி மாறர் - மூர்க்கர் - புராணங்களுள்ளும், பிறாண்டும் காண்க. நற்பண்பு - நன்மையாவது சிவசம்பந்தமாக நின்று வீடுபேற்றுக்குத் துணை செய்யும் தன்மை. எயில் எய்தவர்க்கு - என்பதும் பாடம். |
|
|