யாழின் மொழியா டனிப்பாகரைப் போற்றும் யாகம் ஊழின் முறைமை வழுவா துலகங்க ளான ஏழு முவப்பப் புரிந்தின் புறச்செய்த பேற்றால் "வாழுந் திறமீசர் மலர்க்கழல் வாழ்த்த" லென்பார் | 2 | (இ-ள்) யாழின்...பேற்றால் - யாழ்போன்ற இனிய மொழியினை உடைய உமையம்மையாரது ஒரு தனிப்பாகராகிய சிவபெருமானைப் போற்றும் சிவயாகத்தினை வழிபடும் விதிமுறை தவறாது, ஏழுலகங்களும் மகிழ்ந்தின்புறும் படி செய்த பேற்றினாலே; வாழும் என்பார்- உயிர்கள் நல்வாழ்வடையும் வழியாவது சிவனது மலரடிகளை வாழ்த்துதலேயாம் என்று துணிவாராகி, (வி-ரை) யாழ் இன் மொழியாள் - இனிய இசைபோன்ற மொழியினை உடைய உமாதேவியார்; உவம உருபு தொக்கது; "யாழைப்பழித் தன்னமொழி மங்கையொரு பங்கன்" (நம்பி - தேவா). பாகரைப் போற்றும் யாகம் - சிவனையேநோக்கிச் செய்யும் சிவயாகம்; இந்திரன் - பிரமன் - மால் முதலிய ஏனைக் கடவுளரை நோக்கிச் செய்யும் வேறு காமிய யாகங்களின்றும் பிரித்துணர வைத்தலின் பாகரைப் போற்றும் யாகம் என்றது பிறிதினியைபு நீக்கிய விசேடணம்; ஏனை யாகங்கள் சொர்க்காதி போகங்களைத் தந்து நாளெல்லையில் பிறவியில் வீழ்ப்பன, சிவயாகங்கள் அவ்வாறன்றி, மீளா நெறியாகிய வீடுபேற்றுக்கு ஏதுவாவன; "ஆதி மாமறை விதியினா லாறு சூழ் வேணி, நாத னாரைமுன் னாகவே புரியநல் வேள்வி, தீது நீங்கநீர் செய்யவும்," (2327) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. சிவபாதவிருதயர் இதனைச் செய்ததுவும் அதன் பொருட்டு ஆளுடைய பிள்ளையார் சிவன்பால் வேண்டிப் பொருள் பெற்று ஈந்ததுவும், பிறவும் இதன் சிறப்புணர்த்துவன. ஊழின் முறைமை - விதி முறைகள். உலகங்களான ஏழும் உவப்பப் புரிந்தின்புறச் செய்த - இந்தச் சிவயாகங்களால் அருள்கலி நீங்கி உலகம் இன்புற்று ஓங்கும் என்பது; "கற்றாங் கெரியோம் பிக்கலியை வாராமே, செற்றார்" (தேவா) என்பது முதலியவை காண்க. செய்த பேற்றால்....வாழ்த்தல் என்பார் - சிவயாகங்கள் செய்யப் பேறு பெற்றமையால் இத்துணிபு வரப்பெற்றனர். இத்துணிபு வருதற்கு முன்னைத் தவம் வேண்டுமென்பது. கழல் வாழ்த்தல் வாழுந்திறம் என்பதாம்; வாழும் திறம் - வாழ்வு பெறுதற்குரிய சாதனம்; "பரன் மன்னும்" என்ற வகை நூலினை விரித்தவாறு. என்பார் - கொள்வார் - நின்றார் - என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க; என்பாரும் - கொள்வாரும் ஆகி - நெறிநின்றார் - என எண் உம்மைகளும் ஆக்கச் சொல்லும் வருவிக்க. சோமாசி மாற நாயனார் இத்தலத்துச் செய்த யாகத்தினைப் பற்றி வழங்கும் தலமான்மியச் சிறப்பு வரலாறு இத்தன்மை பற்றி இதுனுள் வைத்து முரணாதவாறு அடக்கிக்கொள்ளத் தக்கது; வகை நூலுள்ளும் இவ்வரலாறுபற்றிக் குறிக்கப்படாமையால் ஆசிரியரும் கூறிற்றிலர் என்க.
|
|
|