பாடல் எண் :3633

சீருந் திருவும் பொழியுந் திருவாரூ ரெய்தி
ஆரந் திகழ்மார்பி னணுக்கவன் றொண்டர்க் கன்பால்
சாரும் பெருநண்பு சிறப்ப வடைந்து தங்கிப்
பாரும் விசும்பணி யும்பதம் பற்றி யுள்ளார்.
4
(இ-ள்) சீரும்..எய்தி - சிறப்பும் சைவமெய்த் திருவும் மிக நல்கும் திருவாரூரிற் சார்ந்து; ஆரம்...சாரும் - ஆரங்கள் விளங்கும் மார்பினையுடைய அணுக்கன் றொண்டராகிய வன்றொண்டருக்கு அன்பினாலே சார்கின்ற; பெருநண்பு.....தங்கி - பெருநண்பினைச் சிறப்பாகப் பெற்று அங்குத் தங்கி; பாரும்.....உள்ளார் - நிலவுலகும் விண்ணுலகும் பணிகின்ற அவரது திருவடிகளைப் பற்றாக அடைந்துள்ளார். (அந்நாயனார்).
(வி-ரை) சீரும் திருவும் பொழியும் - சீர் - சைவச் சிறப்பு; இஃது அடியார் கூட்டத்தால் வரும் நலம் குறித்தது. திரு - சைவமெய்த் திரு - முத்தித் திரு; இஃது இறைவர் சார்பால் வருவது. பொழிதல் - எளிதின் மிக வழங்குதல்; தேச முய்யத் திருத்தொண்டத்தொகை யருளியமையால் சீரும், திருவாரூர்ப் பிறக்க முத்தி என்ற விதியினால் முத்தித்திருவும் இப்பதியில் வழங்கும் நிலை காண்க.
ஆரம் திகர் மார்பின் - நம்பிகள் அரசர் திருவும் வைதிகத் திருவும் விளங்கும் கோலத்துடன் இறைவர் ஆணைப்படி பயின்று நிகழ்ந்தாராதல் குறிப்பு. ஆரம் - மணி மாலையும் மலர்மாலையும்.
அணுக்க வன்றொண்டர் - மரபுரிமையாலே இறைவருக்கு அணுக்கத் தொண்டராம் நிலை பெற்றவர்.
அன்பால்......அடைந்து - அன்பினால் பெருநண்பராகும் நிலை பெற்று. தங்கி-திருவாரூரில் தங்கி.
பாரும் விசும்பும் பணியும் பதம் - நம்பிகள் பதங்களை விசும்புள்ளோரும் பணிவர் என்பது, முன்னைநிலையில் ஆலால விடத்தைச் சிறு அளவினதாக ஆக்கி இறைவர்பால் கொணர்ந்து தேவரைக் காத்தமையாலும், இம்மை நிலையில் , இனி, இந்திரன் மால் பிரமன் முதலிய வானவரும் வந்து போற்றி எதிர்கொண்டு அழைத்துச் செல்ல வெள்ளையானையின் மேல் திருக்கயிலை யடைகின்றமையாலும் பெறப்படும்.
பற்றி - பற்றாகக் கொண்டு,
முன் மூன்று பாட்டுக்களால் இந்நாயனாரது வைதிக சைவ ஒழுக்கமும், இப்பாட்டினாலும் மேல்வரும் பாட்டினாலும் அவரது வரலாறும் கூறும்திறம் காண்க.