தாளாளர் திருச்சங்க மங்கையினிற் றகவுடைய வேளாளர் குலத்துதித்தார் மிக்கபொரு டெரிந்துணர்ந்து கேளாகிப் பல்லுயிர்க்கு மருளுடைய ராய்க்கெழுமி "நீளாது பிறந்திறக்கு நிலையொழிவே" னெனநிற்பார், | 2 | (இ-ள்) தாளாளர்...உதித்தார் - திருச்சங்கமங்கை என்னும் பதியில் தாளாண்மையுடையவர்களாய் வாழ்கின்ற வேளாளர் குலத்தில் வந்தவதரித்தார்; மிக்க பொருள் தெரிந்துணர்ந்து - உண்மைப் பொருளினைத் தெரிந்தும் (அதன்பயனாய்) அதனை உணர்ந்தும்; கேள் ஆகி..கெழுமி -அன்புடையராயும் எல்லாவுயிர்களிடத்தம் அருள் உடையராயும் இணங்க ஒழுகி; நீளாது.....நிற்பார் - பிறந்தும் இறந்தும் வரும் நிலையின் தன்மை மேலும் நீண்டு செல்லாது இப்பிறப்பிலேயே அதனின்றும் நீங்குவேன் என்ற கருத்துடன் அவ்வொழுக்கத்தின் நிற்பார். (வி-ரை) தாளாளர் - தாளாண்மை மிக்கவர்; தாளாண்மை - தாள் - முயற்சி; ஆளர் - ஆள்பவர். "வேளாளர்...தாளாளர்" (பிள். தேவா - ஆக்கூர்). தகவு - தகைமை; மேன்மை; பெருமை; தகவாவது உயிர்களை எல்லாம் கருணையுடன் கண்டு புரப்பதாகிய உழவுத்தொழில் உடைமை; தாளாளராகிய வேளாளர் என்க; "இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலையவர்"; "உழுவா ருலகத்தார்க் காணி யஃதாற்றா, தெழுவாரை யெல்லாம் பொறுத்து" (குறள்) என்பன முதலிய உண்மைகள் காண்க. "இது குடியுயர் தற்கேதுவென்ற ஆள்வினை வகையாம்" என்பர் பரிமேலழகர். அருள் - எல்லா வுயிர்களிடத்தும் இயல்பாகவே செல்லும் கருணை. மிக்க பொருள் - மெய்ப்பொருள்; உறுதிப் பொருள் என்றலுமாம்; மிகுதல் - ஏனை எல்லாவற்றிலும் சிறத்தல்; எஞ்சுதல் என்றலுமாம்; உலகியல் வாழ்க்கையில் வரும் ஏனைய பொய் எல்லாங் கழிய எஞ்சி நிற்கும் என்றதாம். தெரிந்துணர்ந்து - கெழுமி - ஒளிவேன் என - என்றஇவை சமய விசாரத்தில்மனம் வைத்த நாயனார் முதலிற் செய்த முயற்சிகள்; தெரிந்துணர்ந்து - இஃது விசாரித்து அறிகின்ற சித்தத்தின் செயல்; கெழுமி - இஃது உடல் முயற்சி; ஒழிவேன் என - இது முன்னை முயற்சிகளை ஆக்கும் மனத்துணிவு; "சமயங்களானவற்றி னல்லாறு தெரிந்துணர" (1302) என்ற கருத்துக் காண்க. கேளாகி.....கெழுமி - கேள் - உறவு - நட்பு. கேள் என்பது மக்கட் கூட்டத்துக்கும், பல்லுயிர்க்கும் என்பது ஏனையுயிர் வகைக்குமாம். கெழுமுதல் - நண்ணுதல்; இணைந்து ஒழுகுதல். பிறந்திருக்கும் நிலை நீளாது ஒழிவேன் - என்க. நீறுதல் - மீள மீளப் பிறந்தும் இறந்தும் வரும் நிலைகாரண காரியத் தொடர்பாய்ச் சங்கிலிபோல வளர்ந்து வருதல். ஒழிவேன் - நிலையின்றும் நீங்குவேன். நிலையினை ஒழிப்பேன் என்றலுமாம்,. நிற்பார் - அவ்வழியின் முயற்சியினை மேற்கொள்வாராய்; முற்றெச்சம். நிற்பார் - நாடுவார் - உணர்வார் - (3638), தெளிந்து - நாட்டுவார் - (3639) கொண்டே - என - அறிந்தார் - என்று மேற்பாட்டுக்களுடன் கூட்டி முடிக்க. கேளாகிப் பல்லுயிர்க்கும் அருளுடையராய்ச் கெழுமிப் - பிறந்திருக்கும் நிலை ஒழிவேன் என்றதற்கு உயிர்களிடத்து அருளடையராய் வாழ்ந்து பிறவிப் பிணியினின்றும் விடுதலை யடைவது என்று உரைப்பாரு முண்டு. இது புத்தர் கூறும் அறம். நாயனார் இங்கு மேற்கொண்ட நிலை அஃதன்று; அதனைப் பின்னரே ஓதிச் சார்ந்தமை மேற்கூறப்படும். இங்குக் கூறியது புத்த தர்மமாகிய அறம் பற்றாது பொதுப்படக் கூறப்படும் சீவகாருண்ய ஒழுக்கம். "தேசநெறி நிலையாமை கண்டறங்கள் செய்வாராய்....கருணையினால் ஆசிலறச் சாலைகளும் தண்ணீர்ப் பந்தல்களும் அமைப்பார்" (1300); "காவளர்த்துங் குளந்தொட்டும்...நானிலத்துள்ளோர், யாவருக்குந் தவிராத வீகைவினைத் துறைநின்றார்" (1301) என்று வரும் அரசுகள் சரித வரலாறு இங்கு நினைவு கூர்தற்பாலது, ஆளுடைய அரசுகளும் இவ்வாறே அறங்கள் செய்து சமய விசாரணையுட் புக்குச், சமணம் புகுந்துபின் திருவருளாற் சைவநெறியின் மிண்டைமை கருதுக, இங்குக் கூறியநிலை இறைவன் நினைவும் பற்றுமின்றிச் செய்யும் பசுதர்மங்கள்; இவை போகங்களைத் தந்து பிறவிக்கேதுவாம். சிவதருமங்கள் எனப்படும் பதிதருமங்கள் இவற்றின் வேறாம். அவைகளே பிறவை நிக்குவன; அந்நிலையின் உண்மையறிவு பெறுதலை மேற் (3640) கூறதல் காண்க; இவ்வேறுபா டுணராத இந்நாண் மாக்கள் பதிதருமங்களை இகழ்ந்தும், பசுதர்மங்களை உயர்த்தியும் கொண்டு பலவாறும் இழுக்கடைந்து, மிக்க பெருமிதம் வந்து உலகிற் றம்மையே சால மதித்துக் கழிகுவர். இவைபற்றி முன் உரைத்தவை பார்க்க. |
|
|