பாடல் எண் :3638

அந்நாளி லெயிற்காஞ்சி யணிநகரஞ் சென்றடைந்து
நன்ஞான மடைவதற்குப் பலவழியு நாடுவார்
முன்னாகச் சாக்கியர்தா மொழியறத்தின் வழிச்சார்ந்து
மன்னாத பிறப்பறுக்குந் தத்துவத்தின் வழியுணர்வார்,
3
(இ-ள்) அந்நாளில்....நாடுவார் - (ஒழுகும்) அந்நாளில் (அதன் பொருட்டுத் தமது ஊரைவிட்டு) மதில் சூழ்ந்த காஞ்சிபுரம் என்கின்ற அழுகிய நகரத்தின்கண் சென்று அடைந்து நல்ல உண்மை ஞானத்தினைப் பெறுவதற்குரிய பலவழிகளையும் நாடுவாராய்; முன்னாக....சார்ந்து-அதன் பொருட்டு முதலாகச் சாக்கியர் என்பார்கள் மொழியும் புத்தகருமங்களின் வழியிலே சார்ந்து; மன்னாக.....உணர்வார்-நிலையில்லாத பிறப்பினை அறுக்கும் உறுதிப் பாட்டின் வழியினை ஆராய்வராய்.
(வி-ரை) காஞ்சி அணிநகரம் சென்றடைந்து - அந்நாளில் காஞ்சி புரமானது சமய விசாரணை செய்வோர்க்கு உதவியாகப் பலவகைச் சமய நிலயங்களுக்கும் கலைஞான சாதனங்களுக்கும் இருப்பிடமாய் விளங்கியது என்பது நாட்டுச் சரிதங்களாலும், மணிமேகலையில் கச்சிமாகநகர் புக்க காதையாலும் அறியக் கிடக்கின்றது. "மெய்வளந்தரு சிறப்பினா லுலகெலாம் வியப்ப; (1125); "ஆண்ட நாயகி சமயங்க ளாறு மகில யோனியு மளிக்குமந் நகரம்" (1161) என்றவையும் காண்க. "முன்னொரு சமயந் தன்னைப் பொருளென முற்றி நின்றோர், பின்னர்வான் சைவ மெய்தப் பெறினவர் பேசு மாபோல்" (நகரப் படலம் - 4) என்று உவமை முகத்தால் இவ்வுண்மையினையும் இந்நாயனார் வரலாற்றுக் குறிப்புப்படக் குறிப்பிற் கூறுவதும், "வளரிலைத் தருப்பை நுனியெனக் கூர்த்தமதியினர் தொன்றுதொட் டுடைய, பளகறு கேள்விப் பயிற்சியர் மேற்கோண் முதற்பகர் மூன்றினுந் தெருட்டி, இளையருக் குணர்த்து மிலக்கண நெறியோ ரீரிரு புலமையோர் தம்முட், களவிக லிகந்து குழாங்குழா மாகிக் கலைதெரி கழகமும் பலவால்" (மேற்படி-108) என்று விளங்கக் கூறுவதும் ஆகியகாஞ்சிப் புராணவுரைகளும் காண்க; பல்கலைக் கழகங்கள், சமயக்கல்வி நிலையங்கள் முதலியவை (Universities - Institutions of religious learning & research) அந்நகரிலிருந்ததனோடு, புத்த சமணாதி புறச்சமய நிலையங்களும் சங்கங்கள் பாழிகள் பள்ளிகளை நாட்டித் தமது சமய வலைகளை நீளவீசி மக்களைப் புறச் சமயிகள் தம் வயப்படுத்த ஏதுவாயின என்ற வரலாறுகளும் அறியப்படும். கி. பி. 640-ல் நம் நாட்டுக்கு வந்த சீன யாத்திரிகன் யுவாங் சுவாங் என்பவன் காஞ்சியில் தங்கியிருந்தான்; அவன் அங்கும் புத்தர்களது பள்ளிகள் நூற்றுக்குமேல் இருந்தன என்றும், பௌத்த சந்நியாசிகள் ஆயிரக்கணக்காக இருந்தனர் என்றும் எழுதியுள்ளான். இந்நிலையினாலேதான் இந்நாயனாரும் சமய விசாரணை மேற்கொண்டு உண்மை யறியக் காஞ்சியினைச் சென்றடைந்தனர். இதுபோலவே நடுநாட்டினும் அந்நா ணிகழ்ந்தமையின் ஆளுடைய அரசுகளும் பாடலிபுத்திரத்தில் அணைந்து சமண்நெறி புக்கமையும் காண்க. எயிற் காஞ்சி - "பொன்னெயிற் காஞ்சிநகர்" (மணிமே).
நன்ஞானம்...நாடுவார் - "கதிப்பாற் செல்ல ஏதுநெறி?" என்று வீடு காதலித்து "வஞ்சப் பிறவிக் கஞ்சிவந் தொருவன், ஏதிறை யருளென"த் தேடி வந்தோர்க்கே உண்மை ஞானமானது இறைவரருளால் குருமுகமா யருளப்படும் என்பது சிவாகமத் துணிபு; திருவாதவூரடிகள் தம்மிடம் வரும் அறிவுடையோரை ஆன்ம ஞானமும் வீடுபேறும் பற்றி வினவி வந்தனர்; "எண்ணிலாரிடத் தளந்தளந் தறிபொரு ளெல்லாம், உண்ணு நீர்விடாய்க் குவரிநீ ருண்டவரொப்ப" மன அமைதி பெறாமல் சற்குருவை நாடிச்சென்றனர் என்றறிகின்றோம். இவை போன்றன வெல்லாம் ஈண்டு நினைவுகூர்தற்பாலன. நன்ஞானம் - தத்துவ ஞானம்; மெய்யுணர்வு.
முன்னாக...சார்ந்து - காஞ்சிபுரத்தில் சமயவிசாரந் தொடங்கி நன்ஞானம் அடைவதற்குப் பலவழியும் நாடிச் சென்ற இந்நாயனார்க்கு முதலில் எதிர்ப்பட்டுச் சாரக் கிடைத்தது சாக்கியர் சங்கம்; இதனாற் புத்தர்கள் தமது சமயப் பரப்பினை மிகுதியும் காஞ்சியில் அந்நாளிற் செய்திருந்தனர் என்பதறியப்படும்.
மொழி அறத்தின் வழிச்சார்ந்து - "புத்ததருமம்" என்ற தலைப்பின் கீழ் அறமே பொருளென உபதேசிப்பது பௌத்தம்; சாக்கியர் - புத்தர்கள்; தாம் மொழி அறம் - முன்னூல் வழிநூல் இல்லாது தாமே மொழிந்த; மொழி அறம் - உட்கிடை யில்லாது சொன்மாத்திரையாய் நின்றொழியும் என்ற குறிப்புடனும் நின்றது; இவர் கூற்றுக்களின் தன்மைகளை மாபாடியத்துள் பௌத்தம் என்ற தலைப்பில் தொகுத்துள்ளவற்றுட் காண்க. சிவஞானசித்தியார் பரபக்கத்துள்ளும் பார்க்க. அறம் - அறநூல்; ஆகுபெயர்; "அறங்கூறு மாக்கம்" (குறள்).
வழிச்சார்தலாவது - புத்தர்களுள் ஒருவராகக் கூடி அவர்கூறும் ஒழுக்கங்களுள் நிற்றல். அவை துவராடை உடுத்தல் முதலாயின; "தகடனவாடையன்" (திருவந்தாதி);"துவராடைப் படம்புனைவே டந்தவிரார்" (3647).
மன்னாத பிறப்பு - நிலையாமையினை உடைய பிறப்பு; அஃதாவது சாதலை உடையது; தத்துவம் - உறுதி - உள்ளுறை - காரணம் என்ற பொருளில் வந்தது; வழி - கூடும் வழி.
ஞானமறிவதற்கு - வழியுணர்வு - என்பனவும் பாடங்கள்.