அந்நிலைமைச் சாக்கியர்தம் மருங்கலைநூ லோதியது தன்னிலையும் புறச்சமயச் சார்வுகளும் பொருளல்ல என்னுமது தெளிந்தீச ரருள்கூட"வீறில்சிவ நன்னெறியே பொருளாவ" தெனவுணர்வு நாட்டுவார், | 4 | (இ-ள்) அந்நிலையில்....ஓதி அந்த நிலையிலே சாக்கியர்களுடைய அரிய கலைநூலினைக் கற்று; அது....தெளிந்து -அதன்துணிபாகப் பெறப்பட்ட முடிபும் இன்னும் ஏனைப் புறமாகிய சமயங்களிற் சார்வாகக் கூறும் முடிபுகளும் உண்மைப் பொருளல்ல என்ற உண்மையினைத் தெளிந்தாராய்; ஈசர்..நாட்டுவார் - சிவபெருமானது திருவருள் கூடியதனாலே "அழிவில்லாத சிவநன்னெறியே உண்மைப் பொருளாவது" எனப்பெறும் நல்லுணர்வில் சிந்தையினை நிலைபெற நிறுத்துவாராய். (வி-ரை) அருங்கலை நூல் - திரிபிடகம் என்பது; இஃதொன்றே புத்தர்களின் பிரமாண நூலாம். ஆதலின் நூல் என ஒருமையாற் கூறினார், அது தன் நிலையும் என்றதும் காண்க. அது தன் நிலை - அதனால் நிலையிட்ட முடிபு. புறச் சமய சார்வுகளும் - அதனோடு அமைவுறாது, மேலும் தாம் அதனைப் போலவே ஆய்ந்தறிந்த ஏனைச்சமணம் முதலிய புறச்சமயங்களின் முடிபுகளும்; சார்வு - ஈண்டுச் சார்வினாற் பெறப்படும் முடிபு என்ற பொருள் குறித்து நின்றது. பொருள் - உண்மைப் பொருள். தெளிந்து - தெளிவு பெற்று; விளங்கப் பெற்று. ஈசர் அருள் கூட - கூட - கூடுதலால்; காரணப் பொருளில் வந்தது; கூட - உணர்வு நாட்டுவர் - என்று கூட்டுக; அருள் கூடுதலாவது - சிவசத்தி பதிதல்; சத்தி நிபாதம் என்பர். " நம்பரரு ளாமையினால் - அமண் சமயங் குறுகுவார்" (1302) எனச் சைவவுண்மை உணராமைக்கும், அதனாற் பரசமயம் புகுவதற்கும் அருள் கூடாமை - எதிர்மறைக் காரணமாகக் கூறியமை போலவே, ஈண்டுப் புறச்சமயத்தினின்று உண்மையுணர்ந்து சைவநெறியிற் புகுவதற்கு உடன்பாட்டு முகத்தால் அருள்கூட என உணர்த்தியமை காண்க; எனவே உண்மைச் சமய அறிவு கொள்வதற்கும் கொள்ளாமைக்கும். அருள் கூடுதலும் கூடாமையுமே காரணமாம் என்பது உடன்பாடு எதிர்மறை இருவகையானும் காட்டப்பட்டது. இறைவர் யாவர்மட்டும் ஒப்ப அருளுடையவ னன்றே? அஃதாயின் ஒருவர்க்கருளுவதும் ஒருவர்க் கருளாமையும் என்னை? எனின் அஃது அவ்வவர் வினைகளின் பக்குவ பேதம்பற்றி என்க. ஈறுஇல் சிவநன்னெறியே பொருளாவது - ஈறு - முடிபு; அழிவு; பொருள் - மெய்ப்பொருள்; ஈறு இல்லாமையாவது என்றும் எங்கும் ஒருபடித்தாய் நிகழ்தல். உணர்வு நாட்டுவார் - நாட்டுதல- உணர்ந்த பொருளைக் கடாவிடைகளால் பலவாற்றாலும் உறுதிப்படுத்துதல்; உணர்வு என இங்குக் கூறியது பரபக்கத்தால் புறச்சமயச் சார்வுகள் எவையும் பொருளல்ல - ஆதலின் அவை போக எஞ்சி நின்ற சிவநெறியே பொருள் என்ற பொதுவுணர்வு. பரபக்க நிராகரணத்தால் நிகழ்வது. நாட்டுதல் -அதன்மேல் அம்முடிபினைச் சுபக்க ஞானத்தால் உறுதிப்படுத்துதல்; அது மேற்பாட்டாற் கூறப்படுதல் காண்க. அந்நிலையில் - என்பதும் பாடம். |
|
|