பாடல் எண் :3640

"செய்வினையுஞ் செய்வானு மதன்பயனுஞ் சேர்ப்பானு
மெய்வகையா னான்காகும் விதித்தபொரு" ளெனக்கொண்டே
"இவ்வியல்பு சைவநெறி யல்லவற்றுக் கில்ல" யென
உய்வகையாற் "பொருள்சிவ"னென் றருளாலே யுணர்ந்தறிந்தார்.
5
(இ-ள்) செய்வினையும்...எனக்கொண்டே - செய்யும் வினை ஒன்று; செய்பவனாகிய கருத்தா ஒன்று - அதன் பயன் ஒன்று - அதனைக் கொடுத்து ஊட்டுவானாகிய முதல்வன் ஒன்று ஆக உண்மை காணும் வகையினால் விதியினாற் கிடைக்கும் பொருள்கள் நான்காகும் என்ற தெளிவு கொண்டே; இவ்வியல்வு.... உணர்ந்தறிந்தார் - இந்தச் சிறப்பு இயல்புநிலை சைவநெறி யல்லாத ஏனை நெறிகளுக்கு இல்லை என்ற துணிபினையும் உய்திபெறும் தவத்தாலே சிவனருளின் துணையினால் பொருளாவது சிவனேயாம் என்பதனையும் உணர்ந்து அறிந்தனர்(வி-ரை) ஏனை எச்சமயத்தினுக்கும் இல்லாது சைவத்திற்குமட்டும் உளதாகிய தனிச்சிறப்பு இலக்கணத்தை எடுத்துக்காட்டிய சிறந்த இடம் இதுவாம். புறச்சமயத்தி னின்றவாறே ஒருவர் ஒப்புநோக்கி ஆய்ந்து கண்ட முடிபாவது இஃது; ஆதலின் இது மேலும் சிறந்ததாம்; பரசமய நிராகரணமும் சிவசமயத் தாபனமும் ஒருங்கே காணப்படும் இச்சிறந்த பொருளை ஈண்டுச் சாக்கியர் வாயிலாக வெளிப்படவைத்து இப்புராணத்தில் விளக்கிய தகுதியும் பெருமையும் உய்த்துணர்ந்து களிக்கற்பாலது.
செய்வினை....விதித்தபொருள் - செய்வினை - செய்வான் - வினைப்பயன் -கொடுப்பான் - என நான்கு பொருள்களும் ஒரு உண்மைச் சமயத்திற்கு வேண்டப்படுவன; செய்வினை என்றதனாற் பெறப்படும் காரகங்கள் எட்டனுள்ளே சிறப்புப்பற்றி இங்குக் கூறப்பட்டன வினைமுதலும் பயனுமாம்; விதித்த - உண்மை முடிபு கண்டு கூறிய; இந்நான்கும் ஒருங்கு முற்றும் பெறப்படாமையின் ஏனைச்சமயங்கள் எல்லாம் அவ்வவ்வாற்றாற் குறைபாடுபாடுடையன என்பதும், சைவமே முழுமை யுண்மையும் பெற்றுடையதென்பதும் நாயனார் கண்ட மெய்வகை - உண்மைகண்ட நிலை. வினை ஒப்பாத சமயங்கள்; வினை செய்பவனாகிய அவ்வவ்வுயிர்கள்பாற் சேர்ப்பானாகிய இறைவனை ஒப்பாத சமயங்கள் என ஏனை எல்லாம் சமயங்களும் அவ்வக் குறைபாட்டால் ஒழியத்தக்கன என்பதாம். உலகாயதம்,ஏகான்வாதம், சாங்கியம், பவுத்தம், ஆருகதம் என்பனவாதி சமயக்கொள்கைகளின் வைத்து உற்றுநோக்கி இக்குறைபாடுகளையும், சைவத்தின் முழுமையும் உண்மையாகிய மேன்மையினையும் கண்டுகொள்க.சித்தியார் பரபக்கமும், மாபாடியமும் பார்க்க.
இவ்வியல்பு....என - இவ்வியல்பு - முன்கூறியபடி விதித்த பொருள் நான்கினையும் கண்டு பொருள் நிச்சயம் செய்து ஞானமும் வீடும் அடைய வழிகாட்டும் இயல்பு; அல்லவற்றுக் கில்லை - எதிர்மறையாற் கூறியது உறுதி குறித்தற்கு.
உய்வகையாற் பொருள் சிவன் - இஃது இதுகாறும் கூறிய பரபக்க நிராகரணத்தாலும் சில சமய உறுதிப்பாட்டுணர்வினாலும் போந்த முடிபாகிய பயன்; உய்வகை - மெய்ஞ்ஞான முணர்ந்து பிறந்திறக்கும் நிலை நீளாது ஒழிந்து (3637) உய்யும்வகை; வீடுபெறும் தவம். வகையால் வருவதனை வகை என்றார்.
பொருள் சிவன் - பொருள் - உண்மைப் பொருளாவார் சிவபெருமானேயாம் என்ற முடிபு; சிவன் - ஈண்டுச் சிவநெறியினைக் குறித்தது
இப்பாட்டிற்கு இவ்வாறன்றி வேறு வேறாக உரைத்தனர் முன் உரைகாரர்கள்.
இதனாலே பதிபசு பாசமாகிய முப்பொருளுண்மையும், அவற்றின் இலக்கணமும், சாதனமும், பயனுமாகிய சைவசித்தாந்த உண்மைகள் முற்றும் பெறவைத்த ஆசிரியரது தெய்வக் கவிநலமும் கண்டுகொள்க.
அல்லவருக்கில்லை - கொடுப்பானும் - என்பனவும் பாடங்கள்.