பாடல் எண் :3642

"எல்லா முடைய வீசனே யிறைவ" னென்ன வறியாதார்
பொல்லா வேடச் சாக்கியரே யாகிப்புல்ல ராகுவார்
அல்லார் கண்டர் தமக்கிந்த வகில மெல்லா மாளென்ன
வல்லா ரிவரவ் வேடத்தை மாற்றா தன்பின் வழி நிற்பார்,
7
(இ-ள்) எல்லாம்...அறியாதார் - உலகம் எல்லாம் தமது வடிவமாக உடைய ஈசன் என்ற பதத்திற்கு வாச்சியமாகிய சிவபெருமானே முழுமுதலாம் தலைவர் என்ற உண்மை யுணர மாட்டாதவர்களே; பொல்லா.....ஆகுவார் - பொல்லாங்கு துய்க்கும் பொறியிலிகளாய்த் தமது வேடத்தினை அவனில் வேறு என்று கொண்டடொழியும் சாக்கியர்களாகிப் புன்மையின் நின்றொழுகுவர்; அல்லார்...வல்லார் - கரிய விடம் பொருந்திய கண்டத்தினையுடைய சிவபெருமானுக்கு இந்த உலகமெல்லாம் ஆளாவதன்றி மற்றில்லை என்று காணவல்லவராகி; இவர்....நிற்பார் - இந்நாயனார் அந்தச் சாக்கிய சமயத்தவர் தாங்கும் வேடத்தை மாற்றாமலே சிவன்பா லன்பின்வழியிலே நின்றொழுகுவாராய்,
(வி-ரை) எல்லாம் உடைய - உடைய - வடிவாக உடைய; ஈசன் - ஈசன் என்ற சத்தத்தின் பொருளாக உள்ளவன் எவனோ அவனே; இறைவன் - முழு முதல்வனாகிய சிவன்; "எவனுக்கு முற்றும் வடிவங்களாகும்" (காஞ்சிப்புராணம் - அமரேசப்படலம் 15) என்ற கேனோபநிடதப் பொருள் காண்க. சிவபிரானக்குச், சர்வலோகங்களும் உடைமைப் பொருளாயும், அடிமைப் பொருளாயும் இருத்தல் பற்றி ‘எல்லாமுடைய ஈசன்’ என்றருளினார் என்ற குறிப்புமாம். "எப்பொருளுமாக்குவான் ஈசனே யெனுமுணர்வும், அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள் எனுமறிவும்" (திருஞா. புரா. 71); "எல்லாமுன் னடிமையே எல்லா முன்னுடைமையே எல்லாமுன் னுடைய செயலே"(தாயு).
அறியாதார்.....ஆகுவார் - அவ்வறி வறியாதார் சாக்கிய வேடம் சிவன் வடிவின் வேறு என்று புன்மையா யொழுகுவர்; பொல்லாவேடம் - என்றது முழுமு தல்வன் வேடத்தின். வேறா யெண்ணப் படுதலிற் பொல்லாமை புகுந்து என்க.
அல்லார்....ஆள் - "எவனெப் பொருட்டு மாதார மாகி யெவருந் தொழுப்படுபவன்" (காஞ்சிப் புராணம் மேற்படி 15) என்ற உபநிடதக் கருத்தும் காண்க.
வல்லார் இவர் - சாக்கியர்களுள் - அறியாதார் பொல்லா வேடப்புல்லராகுவர்; ஆனால் இவரோ ஆள் என்ன வல்லாராயினராதலின் அதுவே நல்ல வேடமாக அவ்வேடத்தினின்றவாறே அன்பரானார்.
இப்பாட்டுத் திருவாவடுதுறைப் பிரதிகளிலும் சிதம்பரப் பிரதியிலுமில்லை; முன்பின் தொடர்ந்து செல்லும் கொச்சகக் கலிப்பா யாப்பினுடன் தனிப்புகுந்து நிற்றலானும், முன்பாட்டின் பொருளும் கருத்துமே கொள்வதனாலும், இஃதன்றியே சரிதம் செல்லலானும், பிறவாற்றானும் சிலர் இதனை ஐயங்கொள்வர்.