"காணாத வருவினுக்கு முருவினுக்குங் காரணமாய் நீணாக மணிந்தார்க்கு நிகழ்குறியாஞ் சிவலிங்கம் நாணாது நேடியமா னான்முகனுங் காணநடுச் சேணாருந் தழற்பிழம்பாய்த் தோன்றியது தெளிந்தாராய், | 8 | (இ-ள்) காணாத....காரணமாய் - கண்ணுக்குப் புலப்படாத அருவத்திருமேனிக்கும், (கட்புலப்படும்) உருவத் திருமேனிக்கும் மூலமாகிய இருப்பிடமாகி; நீள் நாகம்..சிவலிங்கம் - நீண்ட பாம்பினை அணிந்த சிவபெருமானை அறிந்து வழிபடுதற்குச் சிறந்த அடையாளமாகிய குறியாக விளங்கும் சிவலிங்கம்; நாணாது ....தெளிந்தாராய் -நாணமின்றித் தேடிய மாலும் பிரமனும் காணும்படி அருளாலே அவர்கள் நடுவே விசும்பையும் பாதலத்தையும் அளாவும் அனற்றூனாகித் தோன்றிய வடிவமேயாம் என்று தெளிந்தவராகி, (வி-ரை) காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் - சிவலிங்கம் இறைவரது அருவுருவத் திருமேனி எனப்படும்; சதாசிவத் திருமேனி என்பர். "உருமேனி தரித்துக் கொண்ட தென்றலு முருவிறந்த, அருமேனி யதுவுங்கண்டோ, மருவுரு வானபோது திருமேனி யுபயம் பெற்றோம்" (சித்தி) என்று இக்கருத்தை ஆசாரியர் விளக்குதல் காண்க. காரணம் - மூலம்; ஒன்றும் புலப்படாத அருவினின்றும் புலப்படும் ஒரு அண்டவடிவான பிழம்புருவமானது பற்றி உருவமும், கைகால் முகம் முதலிய அங்கம் எவையும் புலப்படாமை பற்றி அருவமும் ஒரு சேரக் காணப்படுதலின் இதனை அருவுருவம் என்பர்; காணாத அரு - என்றது அருவுருவம்; காண்பதற்கு முன்னையின் நிலை; அருவினின்று அருவுருத் தோன்ற அம் முறையே அருவுருவினின்று உருவம் தோன்றும். ஆதலின் இடையே நின்ற அருவுருவம் மேலுள்ள அருவநிலையினையும், கீழ்உள்ள உருவநிலையினையும் காட்டி நிற்குமாதலின் காரணமாய் என்றார்; "அருவுரு வான போது திருமேனி யுபயம் பெற்றோம்" என்றது இக்கருத்து: காணாத அருஎன்றதனாற் காணும் உரு என்று கொள்க; இதனை உருமேனி தரித்த தென்ற லால் உருவிறந்த அருமேனியுள்ள தெனப்பெற்றாம் என்றனர். இறைவர்க்குத் தடத்தம சொரூபம் என இரண்டு நிலைகள் உண்டு: சொரூபம் தன்னியல்பு; தடத்தம் சிறப்பு. தடத்தம் அரு - அருவுரு - உரு என மூன்று திருமேனிகளாய் வரும். இவற்றினியல்புகள் "உலகெலாம்" என்ற முதற்பாட்டின் உரையில் உரைக்கப்பட்டன. கடைப்பிடிக்க. நாகமணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம் - குணங் குறி கடந்த பேரொளியாகிய இறைவரை ஒரு குறியின்கண் வைத்து வழிபடும் பொருட்டு நிகழ்வது சிவலிங்கமாம். சிவக்குறி எனப்படும். "குறித்த பூசை" (1241) "அண்ணல் பாதங், கொண்டவன் குறிப்பி னாலே கூப்பினான் றாப ரத்தை" (அரசு. நேரிசை - ஆப்பாடி 4). லிங்கம் - லிம் (லயம்): கம் - ஒடுக்கமும் தோற்றமும் குறிப்பது. நாணாது...தோன்றியது - நாணாது - காண என்க. நாணுதலாவது மேலோராக எண்ணியிருந்த தம் அறிவுக்கு எட்டமாட்டாமை பற்றி நாணம் கொள்ளுதல்: நடு - இகலிநின்ற அவ் விருவரிடையே. தழற்பிழம்பாய்த் தோன்றியது - இலிங்க _________________________________________________ 1 எனது சேக்கிழார் - பக்கம் - 219 - 220 பார்க்க. புராணத் திருக்குறுந்தொகையும், கந்தபுராணமும் பார்க்க. "செங்க ணானும் பிரமனந் தம்முளே, எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலார்; இங்குற் றேனென் றிலிங்கத்தே தோன்றினான், பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே" (தேவா - அரசு - இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை - 11). தெளிந்தாராய் - தூய சிவத்தை அன்பினால் மறவாமை தலைநிற்பாராகிய (3641) நாயனார் அச்சிவத்தை வழிபடற்குரிய குறி சிவலிங்கமாம் என்பது தெளிந்துகொண்டவகை இப்பாட்டாற் கூறினார்; அவ்வாறு தெளிந்தவர் அதனை வழிபட்டநிலை மேற்பாட்டிற் கூறுதல் காண்க. சிவமே பொருள் என்று துணிதற்கேதுவாகிய சமய விசாரணையினை அதன் முன்பு விரித்தமையும் காண்க. |
|
|