இந்நியதி பரிவோடு வழுவாம லிவர்செய்ய முன்னுதிருத் தொண்டாகி முடிந்தபடி தான்மொழியிற் றுன்னியமெய் யன்புடனே யெழுந்தவினை தூயவர்க்கு மன்னுமிகு பூசனையா மன்புநெறி வழக்கினால். | 13 | (இ-ள்) இந்நியதி....செய்ய - இந்த நியதியாகிய தமது நியமச் செயலை மிக்க அன்புடனே இவர் செய்துவர; முன்னும்....மொழியில் - (அச்செயல்) எண்ணப்படுகின்ற திறத்தொண்டேயாகி முடிந்த அத்தன்மையினைச் சொல்வோமானால்; அன்புநெறி வழக்கினா - அன்பினில் எழுந்த நெறியின் நியாயத்தினாலே; துன்னிய....பூசனையாம் - பொருந்திய மெய்யன்பு காரணமாகத் தொடங்கி அதுவே யாறாகச் செய்த செயல் தூயவராகிய சிவபெருமானுக்கு நிலைபெற்ற சிறப்பு மிக்க பூசனையே யாகும். (வி-ரை) நியதி - நியதியாகிய நியமச் செயலை; இரண்டனுருபு தொக்கது. முன்னு திருத்தொண்டாகி முடிந்தபடி - முன்னுதல் - நினைத்தல்; நினைப்பின் தன்மையே திருத்தொண்டு நிற்கும் இடம் என்றது குறிப்பு; ஆகி - ஆக்கச் சொல் அல்லாதனவாகியவையே இவ்வாறு ஆயின என்ற விளைவு குறித்தது. "சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும், அத்தன்" (திருவாசகம்) என்ற இடத்து இது சிறந்து விளக்கப்படுதல் காண்க; முடிந்தபடி மொழியில் - முடிந்தது ; அதன் படியினைக் கூறுங்கால் - என்று பிரித்துரைத்துக் கொள்க; படியினை என இரண்டனுருபு விரிக்க; முடிந்த - விளைந்த. அன்புநெறி வழக்கு - விதிவழக்கு, அன்பு வழக்கு என்றிரண்டனுள் இது பின்னைய வழக்காறுட் பட்டதென்க; இது விதி கடந்ததாகக் காணப்படினும் அன்பினால் இறைவர் ஏற்றுக்கொள்வதாம்; வைனகிகர் - மார்க்கர் என்ற வகையினர் கைக்கொள்வது விதிநெறி (விதி-மார்க்கம்) யாம் என்பர். துன்னிய மெய் அன்புடனே எழுந்தவினை - துன்னுதல் - நிறைதல்; எழுந்த - உள்ளூற நிறைந்து தூண்டப்பட்ட; வினை - வழிபாடு. கல் எறிதலாகிய அத்தொழில்; அத்தொழில் பூசனையாம்; எதனாலெனின், அன்புநெறி வழக்கால் என்க. வழக்கு - முறைமை; இது கவிக்கூற்று. "அருளொடும் தாழ்வுறும் வழக்கால்" (அமர்நீதி. புரா - 536) தூயவர் - சிவபெருமான்; இயல்பாகவே பாசங்களி னீங்கியவர்; தூய்மையைச் செய்பவர் என்ற குறிப்புமாம்; வினை தூய்மையற்றதாயினும் அத் தன்மையினைப் போக்கித் தூய்மை செய்து ஏற்றுக்கொள்பவர் என்ற குறிப்புமாம். மன்னும் மிகு பூசனை - மன்னுதல் - நிலைபேறு பெறுவித்தல்; மிகுதல் - தன்னியல்பின் மிக்குச் சிறத்தல். தொண்டர் நிலை - பூசனையே யாமன்பு வழக்கினால் - என்பனவும் பாடங்கள். |
|
|