பாடல் எண் :3649

கல்லாலே யெறிந்ததுவு மன்பான படிகாணில்
வில்வேடர் கெருப்படியுந் திருமுடியின் மேவிற்றால்;
நல்லார்மற் றவர்செய்கை யன்பாலே நயந்ததனை
அல்லாதார் கல்லென்ப ரரனார்க்கஃ தலராமால்.
14
(இ-ள்) கல்லாலே....காணில் - கல்லினாலே எறிந்த செயலும் அன்பினாற் செய்யும் திருத்தொண்டேயாயின தன்மையினை ஆராய்ந்தால்; வில்வேடர்....மேவிற்றால் - வில் ஏந்திய கண்ணப்ப நாயனாரது செருப்படியும் இறைவரது திருமுடியிற் பொருந்தப்பெற்றதாயின தன்மை கண்டோ மாதலின்; நல்லார்....கல்லென்பர் - நல்லாராகிய மற்று அச்சாக்கிய நாயனார் அன்பினாலே விரும்பிய அச்செய்கையினை அல்லாதவர்கள் அவர் எறிந்தது கல் என்று சொல்வார்கள்; அரனார்க்கு அஃது அலர்ஆம் (ஆல்) - சிவபெருமானுக்கு அஃது அலரே ஆகும். (ஆல் - அசை)
(வி-ரை) முன்பாட்டிற் கூறிய முடிபினை உதாரண முகத்தால் மேலும் விளக்கி முடித்துக் காட்டியவாறு.
இப்பாட்டும் முன் "அக நிறைந்த" (3645) என்ற பாட்டும் சிதம்பரத்துப் பிரதியில் இல்லை.
அன்பான - அன்பினாற் செய்யும் தொண்டாகிய; அன்பு - அன்பாற் செய்யும் தொழிலுக்காகி வந்தது; படி - படியினை - நிலையினை; இரண்டனுருபு விரிக்க.
காணில் - ஆராய்ந்து உண்மை காண்போமானால்.
வில் வேடர்....மேவிற்றால் - இது கண்ணப்ப நாயனார் சரித நிகழ்ச்சியினை உதாரண முகத்தாற் காட்டியவாறு; உபலக்கணத்தால் வாய்நீர் உமிழ்ந்ததுவும், தலைச் செருகிய பள்ளித்தாமம் சூட்டியதுவும், ஊனமுது ஊட்டியதுவும் உடன் கொள்க; செருப்படியும் - செருப்படி முதலாயினவையும் என்க. செருப்படி திரு முடியில் மேவிய செயல் அச்சரிதத்தினுள் காண்க. "முடிமிசை மலரைக் காலில் வளைத்தபொற் செருப்பான் மாற்றி" (772); "திருக்கண்ணி லிடக்கா லூன்றி" (826); மேவிற்று - பொருந்தியது - பொருத்தமென இறைவரால் உவந்து மேற்கொள்ளப் பெற்றது; மேவுதல் அங்கீகரிக்கப் பெறுதல்; திருவாத வூரடிகள் முதலிய பெரியோர்களாலும் போற்றப் படுதலுமாம்.
மற்று நல்லார் அவர் - என்க; மற்று - வேற்று வேடத்தால் - வேறுபட்ட செயலால் நின்ற என்பது குறிப்பு; நல்லார் -நன்மையினை உட்கொண்டவர்.
அன்பாலே நயந்த அச் செய்கையினை என்க - அன்பாலே நயந்தமை முன் (3644--3648) உரைக்கப்பட்டது.
அல்லாதார் - அன்புநெறி வழக்காற்றில் வாராதவர்; புறனுரைப்போர்; மூடர்கள்; கல் - கல்லெறிதல் குறித்தது.
அஃது - அதுவே; தேற்றேகாரம் தொக்கது; அஃது அவர் ஆம் - அதுவே மலராகும் என்றதாம்; "புத்தன் மறவா தோடி யெறிசல்லி புதுமலர்க ளாக்கி னான் காண்" (அரசு.தேவா). ஆம் - ஆக்கச்சொல் விளைவு குறித்தது. அலர் - பழிச்சொல் என்று கொண்டு அஃது - கல் என்று சொல்வது - அரனார்க்குப் பழிச் சொல்லாம் என்று முரைக்கநின்றது; அன்பரைப் பழித்தது அரனைப் பழித்ததேயாம்; அன்பினில் விளையும் ஆரமுதாகிய அரனாரது கருணையினையும் பழித்ததேயாம் என்பனவும் குறிப்பு.
கானில் - என்பதும் பாடம்.