பாடல் எண் :3650

அங்கொருநா ளருளாலே யயர்த்துண்ணப் புகுகின்றார்
"எங்கள்பிரான் றனையெறியா தயர்த்தேன்யா" னெனவெழுந்து
பொங்கியதோர் காதலுடன் மிகவிரைந்து புறப்பட்டு
வெங்கரியி னுரிபுனைந்தார் திருமுன்பு மேவினார்.
15
(இ-ள்) அங்கொருநாள்....புகுகின்றார் - அந்நியதி ஒழுக்கத்திலே ஒருநாள் திருவருளினாலே மறந்து உண்ணத் தொடங்குகின்றார்; எங்கள்....எழுந்து - எமது பெருமானைக் கல்லெறிந்து வழிபடாது யான் மறந்தேனே என்று உண்ணாது எழுந்து; பொங்கியதோர்....மேவினார் - மேன்மேலும் பொங்கியதாகிய ஒப்பற்ற பெருவிருப்பத்துடன் மிகவும் விரைந்து புறப்பட்டு வந்து கொடிய யானையின் தோலினை உடுத்த இறைவரது திருமுன்பு சேர்ந்தனர்.
(வி-ரை) அருளாலே அயர்த்து - அயர்த்தல் - மறத்தல்; நியமத்தினை மறந்த மறப்பும் இறைவர் கொடுத்தருளியது; "மறப்பித்துப் பெயர்த்தொன்று நாடுவித்தி" (திருவா); உணவு உண்ணத் தொடங்குகின்றார் அந்நிலையில் நினைந்து என்க. இந்நாயனார் இறைவன்மேற் கொண்ட "அயரா அன்பி"னராதலின் அயர்த்தற்கு ஏதுக் கூறுவராய் அருளால் என்றருளினார். "உண்பதன்முன் மலர் பறித்திட் டுண்ணாராகில்" (அரசு.தேவா) புகுகின்றார் - வினையாலணையும் பெயர்.
எங்கள்....என - இது நாயனார் நினைந்தருளியது. நினைப்பித்த இதுவுந் திருவருளால் வந்தது; மறத்தலும் உடன் நினைத்தலும் அன்று திருவடி சாரும் நிலை தரும் பருவமாதலின் அதன் பொருட்டு அருளால் தரப்பட்டன என்பதாம். எழுந்து - உண்ணப்புக்க நிலையினின்றும் மேல் எழுந்து.
பொங்கியதோர்....புறப்பட்டு - முன் அயர்த்துப் பின் நினைந்தமையால் தமது நியதி பிழைத்த நிலையை நினைந்து பதைத்து வந்த விரைவும் ஆசை கூர்தலும் குறித்தன. புறப்பட்டு - தம் மனையில் உண்ணப் புகுந்த இடத்தினின்றும் புறப்பட்டு. "கழலே மறவாது கல்லெறிந்த"(தேவா).
கரி - கரந்தையுடையது.
அயர்ந்து - அயர்ந்தேன் - என்பனவும் பாடங்கள். இவை பாடமாயின் அன்று மறத்தல் உடல் உபாதியாகிய இளைப்பின் காரணமாக வந்தது என்றுஉரைக்க.