கொண்டதொரு கல்லெடுத்துக் குறிகூடும் வகையெறிய உண்டிவினை யொழித்தஞ்சி யோடிவரும் வேட்கையொடுங் கண்டருளுங் கண்ணுதலார் கருணைபொழி திருநோக்காற் றொண்டரெதிர நெடுவிசும்பிற் றுணைவியோடுந் தோன்றுவார்; | 16 | (இ-ள்) கொண்டது....எறிய - அங்குக் கிடைத்தெடுத்துக் கொண்டதாகிய ஒரு கல்லினைக் குறிகூடும் வகையினாலே (அவர்) எறிய; உண்டிவினை....கண்டருளும் - உணவு உண்ணும் வினையினையும் ஒழித்து அச்சத்தோடும் ஓடிவரும் பெருவிருப்பத்தோடும் அவரைக் கண்டு அருள் புரிகின்ற; கண்ணுதலார்....தோன்றுவார் - நூதலிற் கண்ணுடைய இறைவர் அருள் பொழியும் திருநோக்கத்துடனே அத்திருத்தொண்டரெதிரே நீண்ட வானின் கண்ணே தமது துணைவியாராகிய உமையம்மையாருடன் தோன்றுவாராகி, (வி-ரை) கொண்டது ஒரு கல் - அன்று அங்குக் கிடந்து தாம் எடுத்துக் கொண்டதாகியதொரு கல்லினை; ஒரு - சிவபெருமான் வெளிப்படக் காணவும், இனிக் கல்லெறியும் செயல் இதனோடொழியச் சிவலோகத்திற் சேரவும் தரும் கல்லாதலின் முன்னாள்களின் எறிந்த கற்களினும் தனிச் சிறப்புடைய தென்பார் ஒரு கல் என்றார். ஒரு - ஒப்பற்ற. குறிகூடும் வகை - குறியாவது தாம் இதுவரை மேற்கொண்ட துணிபும் செயலும், அதனால் உட்கொண்ட குறிக்கோளும் ஆகிய குறிப்பு; வழிபாட்டின் இலக்கு;அஃதாவது "உய்வகையாற் பொருள்சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்து" அப்பொருளை அடைய முயலுதல். கூடும் வகை - கைகூடப் பெறும் வகையினாலே. இதுவரை குறித்த உட்கோள் நிறைவேறும் வகை; "கொண்ட குறிப்பினை" (3653) என்பதும் காண்க. குறி - சிவலிங்கம் என்பதுமாம். எறிய அதனை வேட்கையொடும் - கண்டு - என்க. எறித்த செயலினையும், அதனுள் நின்ற வேட்கையினையும் உடன் கண்டு; வேட்கையாவது "பொங்கிய தோர் காதல்" (3650) என முன்கூறப்பட்டது. எறிந்ததனை மட்டும் கண்டு அதனுட்கிடந்து பொங்கிய காதலினைக் காணார் உலகர்; ஆதலின் "அல்லாதார் கல் என்பர்" என்றார்; " உள்ளத்திற் றெளிகின்ற அன்பின் மெய்ம்மை யுருவினையு மவ்வன்பினுள்ளே மன்னும், வெள்ளச்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண் விமலரையு முடன்கண்ட" (2921) என்ற நிலை ஈண்டுக் கருதத் தக்கது. கண்டு அருளும் - கண்டமையால் அருளும்; கண்டு - காரணப் பொருளில் வந்தது; கண்ணுதலார் - அருட் கண்ணுடையராதலிற் கண்டு என்ற குறிப்புடன் இங்கு இப்பெயராற் கூறினார். நுதலிற் பொருந்திய கண்ணுடையவர். முன்பின்னாகத் தொக்க ஏழாம் வேற்றுமைத்தொகை. கருணைபொழி திருநோக்கால் - இதுவரையும் இவர் தொழிலினைக் கண்டிருந்த நிலை காலம் பார்த்துக் கொண்டிருந்த நிலை; இப்போது அருள் புரியும் நிலையாதலின் கருணைபொழி திருநோக்கால் கண்டு என்றார். தோன்றுவார் - தோன்றுவாராகி; முற்றெச்சம். தோன்றுவார் வந்த செயல் என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. உண்டிவினை ஒழித்து - அஞ்சி ஓடிவரும் வேட்கை - இனி இவ்வுலகில் உண்ணுகின்ற - வினை அனுபவிக்கின்ற - நிலையினை ஒழித்து என்றும், பிறவிக்கு அஞ்சி என்றும் குறிப்புப்பட நின்ற அழகு கண்டு களிக்க. ஓடி வருதல் - பாம்பு - புலி முதலிய கொடுவிலங்குகளைக் கண்டு அஞ்சிப் புகலிடம் தேடுவார் போல; "இழைக்கும்வினைப் பயன்சூழ்ந்த விப்பிறவிக் கொடுஞ்சூழலி"னின்றும் பிழைக்க இறைவன் றிருவடியாகிய புகலிடம் நோக்கி ஓடிவருதல் பக்குவ முதிர்ச்சியினைக் காட்டும். நெடுவிசும்பில் - நீண்ட ஆகாயம்; பூதாகாயமன்று - ஞானாகாயம் என்பார் நெடுவிசும்பு என்றார். "நீள் விசும்பு" (அரசு - தேவா); "மிக்கசிவ லோகத்திற் பழஅடிமைப் பாங்கருள" வருகின்றாராதலும் குறிப்பு. உண்டிவினை ஒழித்து - "கல்லினா லெறிந்து கஞ்சி தாமுணுஞ் சாக்கியனார், நெல்லினாற் சோறு ணாமை நீள்விசும்பாள வைத்தார்" (அரசு.தேவா - நேரிசை) என்ற திருவாக்கின் விரிவு; சிறந்த சரிதச்சான்றாக இச்சரிதத்தினை இங்கு விளக்குதல் காண்க. இந்நாயனார் காலம் ஆளுடைய அரசுகளுக்கு முற்பட்டது. தோன்றினார் - என்பதும் பாடம். |
|
|