பாடல் எண் :3652

மழவிடைமே லெழுந்தருளி வந்ததொரு செயலாலே
கழலடைந்த திருத்தொண்டர் கண்டுகரங் குவித்திறைஞ்சி
விழவருணோக் களித்தருளி மிக்கசிவ லோகத்திற்
பழவடிமைப் பாங்கருளிப் பரமரெழுந் தருளினார்.
17
(இ-ள்) மழவிடைமேல்....செயலாலே - இளமை பொருந்திய விடையின் மேலே எழுந்தருளி வந்த ஒப்பற்ற செய்கையினாலே; கழலடைந்த....விழ - திருவடியடைந்த திருத்தொண்டராகிய நாயனார் கண்டு கைகள் கூப்பி நிலமுறப் பணிந்து வீழ; அருள் நோக்கு....எழுந்தருளினார் - அருணோக்கம் பாலித்தருளிச் சிறப்பினான் மிக்க சிவலோகத்திலே பழைய அடிமைத் திறத்தினைக் கொடுத்தருளிப் பரமனார் எழுந்தருளினார்.
(வி.ரை) கழல் அடைந்த - முன்கூறியவாறு முன் உண்மைநெறி கண்ட குறிப்பினால் வந்து வழிபட்டுக் கழலிற் புகல் அடைந்த; இப்போது கழல் அடைந்து பணிதல் மேல் இறைஞ்சி விழ என்றதனாற் கூறப்படுதல் காண்க. கழலடைந்த என்பது சாதனமாக என்னும் பொருள்தந்து நின்றது. கழலடைந்த என்பது சாதனமாக என்னும் பொருள் தந்து நின்றது. கழலைடைந்த - திருவடியைத் தியானித்த. "தன்னடைந்தார்க் கின்பங்க டருவானை" (பிள். தேவா; "மாணடி சேர்ந்தார்"; சேர்தல் - இடைவிடாது தியானித்தல் என்பர் பரிமேலழகர்; இறைஞ்சி விழ - கீழே விழுந்து வணங்க.
வந்ததொரு செயலாலே (தொண்டர்) கண்டு - அவர் அருளால் எழுந்தருளி வராவிடிற் காணுதற் கரியார் என்பது செயலாலே - செயல் தந்த காணக் காட்டுதலாலே - என்றதனால் காண்க.
அருள் நோக்கு - சிவப்பேறு தரும் பார்வை.
மிக்க சிவலோகத்திற் பழ அடிமைப் பாங்கு - மிக்க - ஏனை எல்லாப் பதங்களினும் மிகுந்த சிறப்புடைய; மீளாத; பழ அடிமைப் பாங்கு - "பழ அடியார் கூட்டம் அத்தா காண ஆசைப் பட்டேன்" (திருவா); "தம்மைவிடுத் தாயும் பழய வடியாருடன் கூட்டித், தோயும் பரபோகந் துய்ப்பித்து" (கந்தர் கலிவெண்பா); பாங்கு - பண்பு நிலை; உரிமை; எழுந்தருளுதல் - தம் நிலையில் மறைதல்