பொன்னிநீர் நாட்டி னீடும் பொற்பதி புவனத் துள்ளோர் "இன்மையா லிரந்து சென்றோர்க் கில்லையென் னாதே யீயுங் தன்மையா" ரென்று நன்மை சார்ந்தவே தியரைச் சண்பை மன்னனா ரருளிச் செய்த மறைத்திரு வாக்கூ ராக்கூர் | 1 | (இ-ள்) பொன்னி....பதி - காவிரியின் நீர்பாய்ந்து செழிப்புச் செய்யும் சோழ நாட்டிலே பழமையாகிய அழகிய பதி; புவனத்துள்ளோர்....என்று - "உலகத்துள்ளோர் வறுமையினாலே இரந்து (யாசித்து) சென்றோர்களுக்கு இல்லை என்னாதோ வேண்டுவனவற்றை வரையாது கொடுக்கும் தன்மையினை உடையவர்கள்" என்று; சண்பை....வாக்கூர் - சீகாழித் தலைவராகிய ஆளுடைய பிள்ளையார் நன்மை பொருந்திய வேதியர்களைப் பற்றி அருளிச் செய்த வேதத் திருவாக்கினைப் பெறும் பேறுடைய ஊராகிய; ஆக்கூர் - திருவாக்கூர் என்பதாகும். (வி-ரை) திருவாக்கூராகிய - ஆக்கூர் - பதி என்று கூட்டி முடிக்க; ஆக்கூர் பதி - யாகும் என்க. பெயர்ப் பயனிலை; திருவாக்கூ ராக்கூர் - சொல்லணி நயம் பெறக்கூறியது; "திருவாமூர் திருவாமூர்" (1277); இஃது ஆசிரியரது தெய்வக் கவிநயங்களுள் ஒன்று. திருவாக்கு ஊர் - திருவாக்கினாற் பரவப்பெற்ற ஊர். இன்மையால்....தன்மையார் - ஆளுடைய பிள்ளையார் தேவாரம். "இன்மையாற் சென்றிரந்தோர்க் கில்லையென்னா தீந்துவக்குந், தன்மையா ராக்கூறிற் றான்றோன்றி மாடமே" (பிள் - சீகாமரம் - 9) நன்மை சார்ந்த வேதியரை - அருளிச்செய்த - அப்பதியின் வேளாளர்களை முன்னரே [பதிகம்-(3)] கூறியமையாலும், அப்பதி அந்தணர்கள் நிறைந்த பதியாகலானும் இத்தன்மை வேதியரைப் பற்றிய தென்றருளினர் ஆசிரியர்; இந்நாயனார் மறையவராதலின் இதனைக் குறித்தனர் என்க. இச்சரிதமுடைய நாயனாரது மரபின் பெருமைக் குறிப்பு. மறையவர்க்குரிய அறுவகைத் தொழில்களுள் ஈதலும் ஒன்றாதல் காண்க. சென்றோர் - வினையாலணையும் பெயர். மன்னனார் அருளிச் செய்த - மன்னவராற் பாராட்டப் பெற்றவர் என்றது குறிப்பு. மறைத்திருவாக்கூர் - மறை - தேவாரங்கள். மறை - இறைவரருளிய வேதம் - போல்வன என்பது; வாக்கு ஊர் -வாக்கினைப்பெற்ற பேறுடைய ஊர். அத்திருவாக்கின் பெருமை பற்றி "அன்ன மெய்த்திரு வாக்கெனு மமுதம்" (2986), "பிள்ளை யார்தந் திருவாக்கிற் பிறத்த லாலே" (2881) என்பனவும், ஆண்டுரைத்தனவும், பிறவும் பார்க்க. பொன்னி நீர் நாடு - சோழநாடு; இது நாட்டுச் சிறப்பு . மறைத்திருவாக்கூர் - இது குடிவளமும் மேன்மையும் பற்றி ஆளுடைய பிள்ளையார் திருவாக்கின் பெருமை கொண்டு நகரச் சிறப்புரைத்ததாம். வாக்கூரவ்வூர் - வாக்கூராகும் - என்பனவும் பாடங்கள் |
|
|