ஆலைசூழ் பூக வேலி யத்திரு வாக்கூர் தன்னில் ஞாலமார் புகழின் மிக்கார் நான்மறைக் குலத்தி னுள்ளார் நீலமார் கண்டத் தெண்டோ ணிருத்தர்தந் திருத்தொண் டேற்ற சீலராய்ச் சாலு மீகைத் திறத்தினிற் சிறந்த நீரார். | 3 | (இ-ள்) ஆலை....தன்னில் - கரும்பு ஆலைகளைச் சூழ்ந்த கமுகுகள் வேலி போல அமைந்த அந்தத் திரு ஆக்கூரில்; ஞாலம்....உள்ளார் - உலகில் நிறைந்த புகழினாலே மிகுந்தவர்; நான் மறைகளையும் ஓதும் வேதியர்களது குலத்தின் வந்தவர்; நீலமார்....சீலராய் - விடம் பொருந்திய கண்டத்தினையும் எட்டுத் தோள்களையும் உடையவராகிய கூத்தப் பெருமானது திருத்தொண்டினை மேற்கொ ண்டொழுகும் சீலமுடையவராகி; சாலும்.....நீரார் - சால்பு பொருந்திய ஈகைத் திறத்திலே சிறந்த தன்மை வாய்ந்தவர். (வி-ரை) ஆலை - கரும்பு ஆலை; இங்குக் கரும்புப் பயிர்களையுடைய சோலைகளைக் குறித்தது; " கரும்பல்ல....கமுகென்ன" (65); பூகவேலி - பூகம் - கமுகு; வேலி - வேலிபோலச் சூழ்ந்த. ஞாலமார்புகழ் - உலகியல்; நிலையினால் வரும் புகழ்; இஃது ஈகையினால் வருவது. திருத்தொண்டு ஏற்ற சீலர் - சிவபெருமான் திருத்தொண்டினை மேற்கொண்ட நியம ஒழுக்கம். சாலும் ஈகைத்திறம் - ஈகையின் சால்பாவது திறம் தெரிந்து கொடுத்தல் "தொடுத்த வறுமையும் பயனும் தூக்கி வழங்குநர் போல" (திருவிளை - வாதவூ - பட.); இஃது உலகியல் நிலையில் வறுமையா ளக்கீவது; அளவுபட வருவது; இது பசு புண்ணியம். பதிபுண்ணியமாகிய சிவனடியார்க்குக் கொடுத்தல் வேறு. அது மேல்வரும் பாட்டிற் கூறப்படும் |
|
|