பாடல் எண் :3657

ஆளுமங் கணருக் கன்ப ரணைந்தபோ தடியிற் றாழ்ந்து
மூளுமா தரவு பொங்க முன்புநின் றினிய கூறி
நாளுநல் லமுத மூட்டி நயந்தன வெல்லா நல்கி
நீளுமின் பத்துட் டங்கி நிதிமழை மாரி போன்றார்.
4
(இ-ள்) ஆளும்....தாழ்ந்து - உலகங்களெல்லாவற்றையும் ஆளுகின்ற அங்கணராகிய சிவபெருமானுடைய அன்பர்கள் வந்தணைந்தபோது அவர்களடியில் வீழ்ந்து பணிந்து; மூளும்....தங்கி - மூண்டெழுகின்ற அன்பு மேன்மேற் பொங்க, அவர்கள் திருமுன்பு நின்று இனிய மொழிகளைக் கூறி, நாள்தோறும் நல்ல உணவு ஊட்டி, அவர்கள் விரும்பிய வெல்லாவற்றையும் கொடுத்து அதனால் மேன்மேலும் பெருகிவளர்கின்ற இன்பத்துள்ளே வாழ்ந்து; நிதிமழை மாரி போன்றார் - நிதியை மழைபோலச் சொரிகின்ற மேகம் போன்றிருந்தனர்.
(வி-ரை) ஆளும் - உலகுயிர்களை யெல்லாம் உடைமையாகவும் அ டிமையாகவும் கொண்டு ஆளுகின்ற.
அடியில்....நல்கி - இவை அடியார்களை வழிபடும் முறை; அன்பர்களைச் சிவனாகவே எண்ணி வழிபடுதல் வேண்டு மென்பது சிவாகம விதி.
நயந்தன - அன்பர்கள் விரும்பியவற்றை; அவர்களுக்கு வேண்டுவனவென்று தாம் விரும்பியவற்றை என்ற குறிப்புமாம்.
நீளும் இன்பத்துள் தங்கி - அன்பர்களை நாடோறும் உபசரித்து வழிபட்டமையால் இன்பம் பெருகிவரும்; அந்த இன்பத்துள்ளே திளைத்து வாழ்ந்தனர். "ஆளு நாயக ரன்ப ரானவர்" (444) என்ற விடத்து இளையான் குடிமாறனார் வரலாறும்,பிறாண்டும் இவ்வாறே வருவனவும் இங்கு நினைவு கூர்தற்பாலன; சிவன் அடியார்களை ஆதரவுடன் வழிபட் டுபசரித்தவர்களே இவ்வின்ப விளைவினை அறிய வல்லுநரன்றி, ஏனை உலகர்க்கு இஃது அறியவாராது என்க. நீளும் இன்பம் - இது முடிவில் வரும் முத்தியின்பம் வரையில் நீள்வது என்பது குறிப்பு. "ஞால மார் புகழ்" தரும் ஈகைக்கும் இதற்கும் உள்ள உயர்வு தாழ்வு ஒப்பிட்டுக் கண்டு கொள்ள வைத்த கவி நலங் கண்டுகொள்க.
நிதிமழை மாரி போன்றார் - மழை - மழை போலப் பெய்யும்; மாரி - மேகம்; நிதிமழை - பொன்மழை; கைம்மாறு கருதாது கொடுத்தலின் மாரி போல என்றார்.
இன்னமுதம் - தங்கும் - என்பனவும் பாடங்கள்.