உருநாட்டுஞ் செயல்காம னொழியவிழி பொழிசெந்தீ வருநாட்டத் திருநுதலார் மகிழ்ந்தருளும் பதிவயலிற் கருநாட்டக் கடைசியர்தங் களிகாட்டுங் காவேரித் திருநாட்டு வளங்காட்டுஞ் செங்காட்டங் குடியாகும். | 1 | (இ-ள்) உருநாட்டும்....திருநுதலார் - உருவுடையனாயிருந்து உயிர்கள் மேல் செலுத்துகின்ற தன் ஆணைச் செயலினை மன்மதன் ஒழியும்படி கண்ணினின்றும் பொழிகின்ற செந்தீ வரும் நாட்டத்தினைப் பொருந்திய திரு நெற்றியினையுடைய சிவபெருமான்; மகிழ்ந்தருளும் பதி - மகிழ்ந்து வீற்றிருந்தருளும் பதி; வயலில்....காட்டும் - வயல்களில் கரிய கண்களையுடைய கடைசியர்கள் தமது களியாடல்களைக் காட்டுதற் கிடமாகிய; காவேரி....செங்காட்டங்குடியாகும் - காவேரித் திருநாடு என்று சொல்லப்படும் சோழநாட்டிலே வளம் பொருந்திய திருச்செங்காட்டங்குடி என்பதாகும். (வி-ரை) பதி (யாதெனில்) செங்காட்டங்குடியாகும் என்று கூட்டுக. உருநாட்டும் செயல் - உருவுடையனாயிருந்து செலுத்துகின்ற செயல் - ஆணை; ஒழிதலாவது - உருவில்லாதவனாதல். காமன் செயல் ஒழிய என்னாது உருநாட்டும் செயல் ஒழிய என்றது இறைவரது நெற்றிக்கண்ணால் எரிக்கப்படுவதற்கு முன்னும் காமனது செயல் உண்டு; பின்னும் உண்டு. ஆனால் முன்னர் உருவுடன் நின்று செய்தனன்; பின்னர் இப்போது உருவிலியாய் நின்று செய்கின்றான் என்பதே வேறுபாடு என்று குறிக்க உருநாட்டும் செயல் ஒழிய என்ற அடைமொழி தந்தோதினார். உமையம்மையாரது திருவுருவத்திற் கருத்தை நாட்டி அவரைத் திருமணம் செய்துகொள்ளும்படி செய்த செயல் என்று கந்தபுராண சரிதக் குறிப்புப்பட உரைத்தலுமாம். ஒழியப் பொழி செந்தீ - அவ்வேறுபாட்டுக்குக் காரணம் விழியினின்றும் பொழிந்த செந்தீ என்பதாம்; ஒழிய - ஒழியும் பொருட்டு; உருவிலியாதல் ஏனையோர் காட்சிக்கு மாத்திரமாம்; தன் மனைவி இரதிக்கு உருவுடையனாயிருப்பன். இதுபற்றிய வரலாறுகள் கந்தபுராணம் - காமதகனப்படலம் முதலியவற்றுட் காண்க. உருநாட்டும் செயல் காமன் ஒழிய - நூதலார் மகிழ்ந்தருளும் பதி என்று கூட்டி இப்பதியின் சிறப்பும் பின்வரும் சரிதக் குறிப்பும் பெற உரைக்கவும் நின்றது; என்னை? மக்கள் முதலிய எல்லாவுயிர்களும் தத்தம் போகங்களைப் புல்லுதலில் கருத்தை நாட்டுதல் ஆண் பெண் என்ற உரு வேறுபாடு பற்றி வருவதேயாம். அப்போகங்களினால் பெறப்படும் மக்கள் முதலியவாகிய தம் பொருள்களின் மேல்வரும் நாட்டம் ஆசை முதலிய வலிய உலகப் பற்றுக்களும் அப்போகங்கள் பற்றித் தொடர்ந்து வருவனவேயாம். இங்குச் சிறுத்தொண்ட நாயனாரும், மனைவியாரும் இல்லறத்தில் வாழ்ந்தனர்; பெறுதற்கு அரிய சிறந்த மகப்பேறும் பெற்றனர்; ஆனால் அந்த உருவங்களின்மேல் வைத்த கருத்தினைவிட இறைவனது உருவின்மேல் நாட்டிய கருத்து மிக்கது; "காதலாலே தேடியும் முன்காணேன் றவத்தாலுமைக் கண்டேன்" (3704) "இருவர் மனமும் பேருவகை யெய்தி யரியவினை செய்தார்" (3723) "திருமனையில் மனைவியார் தாமாதவரை, முந்தவெதிர் சென்றடி வணங்கி முழுது மழகு செய்த மனை" (3729) என்பனவும் பிறவும் காண்க. எனவே உயிர்களுக்கு உருவத்திலே காதலை நாட்டுவிக்கும் செயலினைக் காமன் இப்பதியிலே நாயனார் - மனைவியார் - மைந்தனார் - தாதியார் மாட்டு நிகழாமல் ஒழியும்படி நுதலார் அருளும் என்ற குறிப்பும் காண்க. அருளுதல் - பக்குவம் நோக்கி அருள் செய்தல். விழிபொழி செந்தீ வரும் நாட்டம் - சிரிப்பினும், கையினும் தீயிருத்தலால் அவற்றினின்றும் பிரித்துணர்தற்கு விழி பொழி என்றார். அருளும் தருதலால் செந்தீ வரும் என்றார்; நாட்டம் - கண்; "நுதல்விழி நாட்டத் திறையோன்"(மணிமே). விழி பொழி - வருநாட்டம் - என்றதில் விழிபொழி என்றது எரித்தற் கண்ணும், வருநாட்டம் - என்றது பின்னர் அருள் செய்து உயிர் பெற்றெழுந்து வருதலை நாடிய அருள் நோக்கத்தின் கண்ணும் குறிப்புக்கள் பெற நின்றன; "நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே" என, இந்நெற்றித் திரு விழி அழித்தற்காகவன்றி அடியார்க்கருள் பயத்தற்காகவும் செயற்படும் என்று அரசுகள் போற்றியதனாலும் காண்க; வரும் என்ற அடைமொழியின் குறிப்பும் இது. விழிபொழி செந்தீ வருநாட்டம் - "கட்டழல் பொதிந்த நெற்றிக்கண்" (காமதக - 89) என்று இதனை இவ்வாறே கந்தபுராணம் கூறுதலும் காண்க. தீப்பொழிந்ததும் அருளே யாமென்பதும் குறிப்பு. "யாமுனை முனியி னன்றோ பின்பது தணிவ துள்ளம் பேதுறன் மைந்த!" என்ற (திருக்கல்யாணப் படலம் - 88) கந்தபுராணம் காண்க. பார்வையினாலே பொழிகின்ற அக்கினி தோற்றும் கண் என்பர் இராமநாதச் செட்டியார். கருநாட்டம் - கரிய கண்கள்; களித்தலாலே தெள்ளிய நாட்டமில்லாத என்பதும் குறிப்பு. களிகாட்டும் - களியாடற் செயல்கள். குரவையாடல் முதலியன என்பாரு முண்டு. காவேரித் திருநாட்டு - சோழ வளநாட்டின்கண்; நாட்டு - நாட்டின்கண்; ஏழனுருபு தொக்கது. நாட்டின் குடியாகும் என்க. இதனால் நாட்டு வளமும், வளங்காட்டும் என்றதனால் வளமும் கூறியவாறு காண்க. இனி இவ்வாறன்றி நாட்டுவளங் காட்டும் என்று கூட்டி நாட்டின் வளங்கள் முற்றும் தன்னகத்தே விளங்கக் காட்டும் குடி என்று இருவளமுஞ் சேர்த்துரைத்ததாக உரைப்பினுமமையும். களிநாட்டும் - என்பதும் பாடம். |
|
|