பாடல் எண் :3661

நிலவியவத் திருப்பதியி னெடுஞ்சடையார் நீற்றடைவால்
உலகில்வள ருயிர்க்கெல்லா முயர்காவற் றொழில்பூண்டு
மலர்புகழ்மா மாத்திரர்தங் குலம்பெருக வந்துள்ளார்
பலர்புகழுந் திருநாமம் பரஞ்சோதி யாரென்பார்.
2
(இ-ள்) நிலவிய அத்திருப்பதியில் - நிலைபெற்ற அந்தத் திருப்பதியிலே; நெடுஞ்சடையார். தொழில் பூண்டு - நீண்ட சடையினையுடைய சிவபெருமானது திருநீற்றுச் சார்பினாலே உலகிற் பிறந்து வளர்கின்ற எல்லாவுயிர்களுக்கும் உயர்வாகிய காவல் தொழிலை மேற்கொண்டு; மலர்புகழ்....வந்துள்ளார் - மலர்கின்ற புகழினையுடைய மாமாத்திரர் குலம் பெருகும்படி வந்தவதரித்துள்ளவர்; பலர் புகழும்....என்பார் - பலரும் புகழ்கின்ற பரஞ்சோதியார் என்று சொல்லப்படும் திருநாமத்தினை யுடையவர்.
(வி-ரை) நிலவிய - சிறப்பினால் நிலைபெற்ற.
நீற்று அடைவால் - திருநீற்றுச் சார்பின்கண் நின்றமையாலே; அத்துணையாற் பெற்ற வலிமையினாலே; "மதியணிந்தார் திருத்தொண்டு வாய்த்த வலியுடைமையினால்" (3666) என்பது காண்க; நீற்று அடைவால் - தொழில் பூண்டு - என்று கூட்டுக. அஃதாவது உயிர்க்கெல்லாம் காவற்றொழில் பூணும் வலிமை திருநீற்றுச் சார்பினாற் பெற்று என்க.
உயிர்க்கெல்லாம் உயர் காவற்றொழில் - இங்கு மருத்துவத் தொழில் குறித்து நின்றது. "ஆயுள் வேதக்கலையும்" என மேல்வரும் பாட்டிற் குறித்தல் காண்க.
மாமாத்திரர் குலம் என்பது வழிவழி மருத்துவன் றொழில் செய்யும் ஓர் மரபு; "ஆமாத்தியா" என்ற மரபுடன் மயங்கற்பாலதன்று; அது மறையவர் குல வகையுள் ஒன்று. உண்மை நாயன்மார்களுள்ளே மறையோர் பதின்மூவர் என்றும், சிவவேதியர் இருவர் என்றும், கூறி வகைப்படுத்திய ஆசிரியர் உமாபதியார் "மாமத்திரர் மரபிற் சிறுத்தொண்டர் ஒருவர்" (புராணவரலாறு-28) என்று வேறு பிரித்துக் கூறியருளியது காண்க. இம்மரபு வேதியர்க்கும் அரசர்க்கும் இடையில் வைத்தோதப்பட்ட வைப்பு முறையுங் கருதுக. இது முப்புரி நூலணியும் மரபென்றும் கருதவுள்ளது. "வெந்த நீறணிமார்பன்", "சிறப்புலவன் சிறுத்தொண்டன்", "பொடி நுகருஞ் சிறுத்தொண்டன்" (பிள்.தேவா) என வரும் திருவாக்குக்களுடன் "முந்நூல் சேர் பொன்மார்பிற் சிறுத்தொண்டர்" என்ற ஆசிரியர் திருவாக்கும் கருதுக; ஒருசார் வேதியர் மரபு போன்று முந்நூலணியும் சார்புடையதொரு மரபு என்பதாம்.
உயர் காவற்றொழில் - படைக்கலத்தின் பயிற்சியால் வரும் சேனாபதித் தொழிலும் குறிப்பு; உயர் - செவ்விய நெறியிற் செலுத்தப்படுதல்.
மாமாத்திரர் - நாயனாரது மரபு; குலம்பெருக - பெருகுதல் - விளங்குதல்.
வந்துள்ளார் - வருதல் - அவதரித்தல்.
பலர் புகழும் திருநாமம் - பல சமயத்தாராலும் புகழப்படும் திருநாமம்; பரஞ்சோதி யென்பது பல சமயத்தார்களும் மேற்கொண்டு புகழப்படுதொன்றாம். ஆயினும் "சோதி யாயெழுஞ் சோதியுட் சோதிய" "ஒளியா யொளியதனொளியா யொளியத னொளியுந் தணிதரு மொளியாகி" (பேரூர்ப்புராணம்) என்றபடி எல்லாச் சோதிகட்கும் பரமாய் - அப்பாற் பட்டதாய் - உள்ள சிவச்சோதிக்கு இப்பெயர் பொதுவாயும் சிறப்பாயு முரியதாம். "பலர்புகழ் ஞாயிறு" (முருகு.)
என்பார் - எனப்படுவார்.