ஆயுள்வே தக்கலையு மலகில்வட நூற்கலையுந் தூயபடைக் கலத்தொழிலுந் துறைநிரம்பப் பயின்றவற்றாற் பாயுமத குஞ்சரமும் பரியுமுகைக் கும்பண்பு மேயதொழில் விஞ்சையினு மேதினியின் மேலானார். | 3 | (இ-ள்) ஆயுள் வேதக் கலையும்....பயின்றவற்றாற் - ஆயுள் வேதம் எனப்படும் மருத்துவ நூற்கலையும் அளவில்லாத வட நூல்களில் உள்ள மற்றும் பலவிதமாகிய கலைகளையும், தூய்மையுடைய படைக்கலங்களின் தொழிற்கலையும், ஆகிய இவற்றை யெல்லாம் அவ்வவற்றின் எல்லை நிரம்பும் அளவும் பயின்றள்ளார்; பாயும்....மேலானார் - (அந்தக் கலைகளைப் பயின்றதனோடு) பாய்கின்ற மதம்பொழியும் யானைகளையும் குதிரைகளையும் செலுத்தும் தன்மை பொருந்திய தொழில்புரி வித்தையிலும் உலகில் மேம்பட்டவராயினார். (வி-ரை) ஆயுள் வேதக்கலை - மருத்துவக் கலை; அலகில் வடநூற் கலை - வடமொழி நூல்களிற் பேசப்படும் ஏனைக் கலைஞானங்கள்; இவற்றை வேறு பிரித்து வடநூல் என்று தொகுத்தமையால் ஆயுள் வேதக் கலை தென்மொழியாகிய தமிழில் உள்ளது என்பதும், அதனையே பரஞ்சோதியார் பயின்றனர் என்பதும் கருதப்படும். தமிழில் உள்ளவை சித்தர் மருத்துவ நூல்கள். போகர் முதலிய மருத்துவப் பெரியார்கள் செய்தவை; மருத்துவன் றாமோதரனார் என்றொரு சங்கப் புலவர் வரலாறும் காண்க; தேவாரங்களை வேதம் என்பதுபோல மருத்துவக் கலையினை ஆயுள்வேத மென்றார்; அது வேதாங்கங்கள் ஆறனுள் ஒரு பகுதியாதலும் குறிப்பு. வடநூற் கலை - நாயனாரது குலநலம் பற்றிய ஏனைக் கலைஞானங்கள்; இவற்றிற்குரிய நூல்கள் வடமொழியில் உள்ளன என்பது. ஆயுள் வேதம் - இவரது குலத் தொழிற்குரியது பற்றித் தனியே எடுத்துக் கூறினார். உபவேதங்களுள் ஒன்று இது. தூய படைக்கலம் தொழில் - இந்நாளிற் செய்வதுபோல் மக்களின் பெருநாசத்திற்கும் ஒவ்வாத கேட்டுக்கும் காரணமாகிய பாவத்திற்கும் கொலைக்கும் உட்படாது உலகங் காவலாகிய தூயதொழிலுக்குத் தூயமுறையில் விதிப்படி பயன்படுவன என்பார் தூய என்றார். "இடையிரு வகையோ ரல்லது நாடிற், படைவகை பெறாஅ ரென்மனார் புலவர் "(தொல் பொருள். மரபு-75) என்றமையாலும்இவர் வேதியர் மரபன்றென்பதும் பெறப்படும்,. துறை நிரம்புதல் - அவ்வக் கலைகளின் எல்லை அளவு படும்படி நிறைதல். பாயும்....தொழில் விஞ்சை - யானை ஏற்றம் குதிரையேற்றம் என்ற இவற்றைக் கலைஞான அளவில் மட்டும் நில்லாது சேனைத் தலைவராயிருந்து பகைவர் வந்தால் அவர்மேற் செலுத்தி வெல்லும் படை ஆளும் தன்மையுடைய ஒரு தொழிலாகவும் கைவர; தொழில் விஞ்சையினும் - கலையே யன்றித் தொழிலிலும் என உம்மை இறந்தது தழுவியது. இப்பண்பினால் அரசர்க்குப் போரில் வெற்றிவரச் செய்தமை மேல் (3664 - 3665) உரைத்தல் காண்க. பயின்றுள்ளார் - பண்பின் - விஞ்சையினில் - என்பனவும் பாடங்கள். |
|
|