பாடல் எண் :3663

உள்ளநிறை கலைத்துறைக ளொழிவின்றிப் பயின்றவற்றாற்
"றெள்ளிவடித் தறிந்தபொருள் சிவன்கழலிற் செறி" வென்றே
கொள்ளுமுணர் வினின்முன்னே கூற்றுதைத்த கழற்கன்பு
பள்ளமடை யாயென்றும் பயின்றுவரும் பண்புடையார்.
4
(இ-ள்) உள்ளநிறை....பயின்று - தமது உள்ளம் நிறைவு பெறுவிக்கும் கலைத்துறைகளை எல்லாம் இடையறாது பயின்று தேர்ந்து; அவற்றால் உணர்வினில் - அவை எல்லாவற்றாலும் தெளிவுபெற வடித்து எடுத்த பொருளாவது சிவன்றிருவடியிலே செறிந்த அன்புடைமையாகிய ஒழுக்கமேயாம் என்றே கொள்ளும் உணர்வினாலே; முன்னே - முதன்மை பெற; கூற்றுதைத்த...பண்புடையார் - இயமனை உதைத்த திருவடியினிடத்தே அன்பு பூண்ட ஒழுக்கம் பள்ளமடையில் நீர் ஓடுதல் போலத் தடையில்லாது விரைவாக என்றும் பயின்று வரும் பண்பினை உடையாராயினார்.
(வி-ரை) உள்ள நிறை கலைத்துறைகள் - இவை வேறு; முன்பாட்டிற் கூறியவை வேறு,. அவை உடலையும் உலகினையும் பற்றியவை; இவை உயிரினையும் அதன் உட்பற்றாகிய இறைவனையும் பற்றியவை; இவை புறத்திலன்றி உள்ளத்தினுள் ஆராய்ந்து தெளிதற்குரியனவாதலின் உள்ள நிறை கலைத்துறைகள் என்றார்; நிறை - நிறைதற்கு ஏதுவாகிய; நிறைவு - அமைதி.
அவற்றால் - அவற்றின் துணையாலே.
தெள்ளி வடித்து அறிந்த பொருள் - தெள்ளுதல் - ஆராய்ந்து தெளிதல்; வடித்தல் - முடித்தல்; பொருள் - உண்மைப் பொருள்.
செறிவு - செறிந்த - உறைப்புடைய - அன்பின் ஒழுக்கம். செறிவு - அதனை உடைய ஒழுக்கத்துக்கு வந்தது. சிவன் கழலிற் செறிவு - இடையறாத சிவத்தியானமுமாம்.
செறிவே என்று கொள்ளும் - என்று பிரிநிலை ஏகாரம் பிரித்துக் கூட்டுக. தேற்றேகாரமுமாம். கொள்ளுதல் - விடாது உட்கொள்ளுதல்; பற்றுதல். உணர்வினில் - உணர்வினாலே . "கற்றதனா லாய பயன்" என்ற கருத்து.
முன்னே பயின்று - முன் - முதன்மையாக; முன்கூறிய உலகியல் நிலைகளின் பயிற்சி பின்னாக என்பதாம்.
பள்ள மடையாய் - இஃது உழவுத் தொழிலின் மரபு வழக்கு. மதகு கால்வாய்களினின்றும் நிலத்துக்கு நீர் செல்லும் துவாரம் மடை எனப்படும்; மடை - நீர்வாய்; மடுத்தற்குரியது மடை. பள்ளமடையினின்று நீர்பாய உள்ளதாய் அமைந்த நிலம் நீர்க் குறைவில்லாமையால் தண்டாத விளையுள் தரும் ஏற்றமுடைய தென்பர்; அன்பின் ஒழுக்கமானது இவரது உள்ளத்திலும் மெய்மொழிகளிலும் இடையறாது மேலிருந்து நீர் கீழே பாய்வதுபோலப் பாய்ந்து வரும் தன்மை குறிப்பு; "பள்ளந்தா ழுறுபுனலிற் கீழ்மே லாகப் பதைத்துருகும் அவர்"(திருவா); பள்ளமடை - பள்ள நிலத்துக்கு நீர்பாய அமைந்த மடை.
என்றும் - இடையறாது.
கலைத்தொழில்கள் - என்ற பாடம் பிழை.