ஈசனடி யார்க்கென்று மியல்பான பணிசெய்தே ஆசில்புகழ் மன்னவன்பா லணுக்கரா யவற்காகப் பூசன்முனைக் களிறுகைத்துப் போர்வென்று பொருமரசர் தேசங்கள் பலகொண்டு தேர்வேந்தன் பாற்சிறந்தார். | 5 | (இ-ள்) ஈசனடியார்க்கு....செய்தே - சிவனடியார்க்கு எந்நாளும் இயல்பால் ஆன பணிகளைச் செய்தே; ஆசில்....அணுக்கராய் - குற்றமில்லாத புகழினையுடைய அரசனிடத்து அன்பினாலே பக்கத் துணையாயிருந்து; அவற்காக....வென்று - அவனுக்காகப் போரிலே செலுத்தப்படும் யானைப் படையினைச் செலுத்திப் பல போர்களில் வெற்றிகொண்டு; பொரும் அரசர்....சிறந்தார் - போரில் எதிர்த்து நிற்கும் அரசர்களது தேசங்கள் பலவற்றையும் கைக்கொண்டு தேர்ப்படையினையுடைய தமது அரசனிடம் சிறப்புப் பெற்றனர். (வி-ரை) இயல்பான பணி - தம்மியற்கையாய் உள்ளத்தெழும் அன்பினாலே ஆகிய பணிகள் எல்லாவற்றையும்; இயல்பு - உரிமையுமாம். ஆசில் புகழ் மன்னவன் - ஆசு இல் புகழ் - குற்றமற்ற புகழாவது நீதிப்படி அரசு புரிந்து குடிகாத்தலும், அநீதியான போர்களால் பிற அரசர்களையும் மக்களையும் அலைக்காமையுமாம். இந்த நாளில் நிகழ்ந்த பெரும் போர்களையும் அவற்றுள் மன்னர்களும் மன்னராய்ச் செயல் செய்வார்களும் செய்த கொடுந் தொழில்களையும் கருதுக. மன்னவன் - இவ்வரசன் மகேந்திரவர்மன் மகனாகிய நரசிம்மவர்மன் என்னும் பல்லவ அரசன் என்பது சரித்திர ஆசிரியர்களால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது; மேற்பாட்டில் வரும் வடபுலத்து வாதாபிப் போர் (Battle of Badami)என்பது கல்வெட்டுக்களால் ஆறாம் நூற்றான்டின் பிற்பகுதியில் கி.பி.640-க்கும் 643-க்கும் இடையே நடந்திருக்க வேண்டுமென்றும், 642-ம் ஆண்டா யிருக்கலாம் என்றும் துணியப்படுகின்ற படியால், இம்மன்னனது காலமும், அதனால் பரஞ்சோதியாரது (சிறுத்தொண்டர்) காலமும், அதன் துணையாலே அவருடன் ஒரு காலத்தவரான திருஞானசம்பந்த நாயனாரது காலமும் இதுவே யெனச் சரித ஆசிரியர்கள் துணிந்துள்ளார்கள். 1நாயன்மார்கள் வாழ்ந்த கால ஆராய்ச்சிக்கு முதலாவதாகப் பெருந்துணையாய்க் கிடைத்தது இச்செய்தியேயாம். (மகேந்திர வர்மன் - கி.பி.625 - 650 என்ப.) அணுக்கர் - பக்கத்திருந்து அந்தரங்கமான உரிமைப்பாட்டுடன் ஆலோசிக்கவும் தொழிலில் ஏவப்படுதற்கும் உரியவர்கள். பூசல் முனை - போர் முகத்திலே; முனை - முகம். சிறந்தார் - சிறப்புச் செய்யப்பட்டு அரச சேவையில் அமர்ந்தனர்,. போய் வென்று - என்பதும் பாடம். |
|
|