பாடல் எண் :3665

மன்னவற்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித்
தொன்னகரந் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியு நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்
இன்னனவெண் ணிலகவர்ந்தங் கியலரசன் முன்கொணர்ந்தார்.
6
(இ-ள்) மன்னவற்கு....துகளாக - அரசனுக்காகப் படையெடுத்துச் சென்று வடபுலத்திலே வாதாவி என்னும் பழைய நகரம் தூளாக இடிபடும்படி; துளை நெடுங்கை வரை உகைத்து - யானைப்படையினைச் செலுத்தி வென்று; பன்மணியும்....முன் கொணர்ந்தார் - பல மணிகளையும் இன்னும் இவ்வாறான எண்ணில்லாதனவற்றையும் கைக்கொண்டு இவ்விடத்துத் தமது அரசன் முன் கொண்டு வந்தனர். (வி-ரை) மன்னவற்குத் தண்டுபோய் - மன்னவற்கு - அரசனுக்காக; அரசனேவலால்; தண்டு போதல் - பகைவர் மேற் படை செலுத்திச் செல்லுதல்.
வடபுலத்து வாதாவித் தொன்னகரம் - இது Badami என்று வழங்கப்படும்; பம்பாய் ராஜதானியில் பெல்காம் என்ற சில்லாப் பிரதேசத்தில் உள்ளதென்பர். இது சளுக்கிய அரசன் புலிகேசியினுடைய தலைநகரமாயிருந்த தென்றும், அவனுக்கும் பல்லவ மன்னன் நரசிங்கவர்மனுக்கும் நேர்ந்த போரில் (சிறுத்தொண்டர்) சேனாபதி பரஞ்சோதியாரால் வென்று தகர்க்கப்பட்டதென்றும் கல்வெட்டுக்களால் அறிகின்றோம்; இடிந்த பலமான அக்கோட்டைப் பகுதிகள் இன்றும் காண உள்ளன.
துகளாக - துகளாகும்படி; உகைத்து - (சேனை) செலுத்தி; உகைத்தல் - செலுத்துதல், ஏவுதல்; பகடு - யானையின் ஆண்; கைவரை - யானை.
பன்மணியும்....கவர்ந்தே - கொணர்ந்தார் - இது முன்னாள் போரில் வென்றார் செய்யும் மரபு; "மன்னர்முன்னாப், பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமுங் கொண்டுவண்டேர், அணிவார் முரசினொ டாலிக்கு மாவோ டணுகினரே" (கோவை - 330) என்று இதனைச் சுவைபெறக் கூறுதல் காண்க. பகை அரசர்
______________________
1 இவ்வாராய்ச்சியினை முதன் முதற்செய்தவர் ஆசிரியர் P.சுந்தரம் பிள்ளை அவர்கள்; அவர்கண்ட முடிபுகளைப் பற்றி ஆளுடைய அரசுகள் சரித ஆராய்ச்சிக் குறிப்பு. III - பக்கம் 767 பார்க்க.பணிந்தால் அவர்பாற் றிறைகொண்டு மீளுதலும், பணியாது போர் செய்யின் அவர்களது சின்னங்களைக் கைக்கொண்டு மீளுதலும் வென்ற படைத்தலைவர் செயலாம். இங்குப் பகையரசன் பணியாமையால் அவனது தலைநகரக் கோட்டையைத் தகர்த்துப் போர்ச் சின்னங்களாக இப்பண்டங்களைக் கொணர்ந்தனர். கவர்ந்து - என்ற குறிப்புமிது. புகழ்ச்சோழ நாயனார் புராண வரலாறும் பார்க்க.
எண்ணில் கவர்ந்தே - இப்பொருள்களுடன், பரஞ்சோதியார் அந்நகரினின்றும் ஒரு விநாயகப் பெருமான் றிருவுருவத்தையும் நினைவுக் குறியாகக் கொணர்ந்து அவரைத் தமது நகரமாகிய திருச்செங்காட்டங்குடித் திருக்கோயிலாகிய கணபதீச்சரத்தில் தாபித்தனர் என்றும் கூறுவர்.
இயல் அரசன் - இகலினாலன்றி நீதியியல்பினால் அரசு புரிபவன்.
பரிநிரையும் - இகலரசன் - என்பனவும் பாடங்கள்.