பாடல் எண் :3667

தம்பெருமான் றிருத்தொண்ட ரெனக்கேட்ட தார்வேந்தன்
"உம்பர்பிரா னடியாரை யுணராதே, கெட்டொழிந்தேன்!
வெம்புகொடும் போர்முனையில் விட்டிருந்தே" னெனவெருவுற்
"றெம்பெருமா! னிதுபொறுக்க வேண்டு"மென விறைஞ்சினான்.
8
(இ-ள்) தம்பெருமான்....தார்வேந்தன் - தமது இறைவரது திருத்தொடர் இவர் என்று கேட்ட, மாலை யணிந்த அரசன்; எம்பெருமானடியாரை....வெருவுற்று - எமது பெருமானது அடியாராகிய இவரை இன்னார் என்றறியாதே, கெட்டொழிந்தேன், வெம்மையாகிய கொடிய போர் முனையில் சென்று போர் செய்யும்படி விட்டிருந்தேனே! என்று நடுக்கமுற்று; எம்பெருமான்!....இறைஞ்சினான் - எமது பெருமானே இப்பிழையினைப் பொறுத்தருள வேண்டும் என்று வணங்கினான்.
(வி-ரை) தம்பெருமான்....கேட்ட - இவர் தொண்டர் என்று அமைச்சர்கள் சொல்லக் கேட்ட, திருத்தொண்டு வாய்ந்த வலியுடைமையால் இவருக்கு எவரும் எதிர் நில்லார் என்று அமைச்சர்கள் இவரது வெற்றிக்குக் காரணமாகிய அளவே எடுத்துக் கூறினர்; அது கேட்டவுடன் அரசனும் சிவன்பாற் பேரன்புடையவனாதலின், அவ்வெற்றியின் எண்ணத்தை அறவே விடுத்து, இவர் திருத்தொண்டராம் பெரிய தன்மையினையும் இவரை அறியாதே போர்முனையில் விடுத்த தனது அபசாரத்தையுமே என்ணி நடுங்கினான். இஃது அன்பின் றிறத் தாலாயது.
கெட்டொழிந்தேன் - ஒரு சொன்னீர்மைத்தாய்க் கெட்டேன் என்னும் பொருள் தந்து நின்றது. மிகக்கெட்டேன் எனினுமமையும்; தார்வேந்தன் - தார் - சேனையுமாம்;
வெருவுற்று - சடுதியில் நேர்ந்த அச்சத்தால் மெய்ந் நடுங்குதல்.
எம்பெருமான்! - தலைவரே!; முன்னே அவரைப் புகழ்ந்துரைத்த (3666) போது தன் கீழே தொழில்புரியும் சேனைத் தலைவர் என்ற நிலையினையே உட்கொண்டு புகழ்ச்சி மொழி கூறினான். இப்போது அவர் திருத்தொண்டு வாய்த்த வலியுடையார் என அறிந்தபோது அவர் கீழே தான் அமைந்து அவரைத் தனது தலைவர் என்ற நிலையினை மேற்கொண்டான். இஃது அவனது பழுத்த சிவனடிமைப் பண்பின் றிறம்; அவர்பால் பிழை பொறுக்க வேண்டுவதும் அவ்வாறேயாம். இது - தொண்டராதலை அறியாமே போரில் விட்டிருந்த பிழை; "மதக்களிற் றெதிரேயிந்த, மெய்த்தவர் சென்ற போது வேறொன்றும் புகுதா விட்ட, அத்தவ முடையேனானேன்" (588) என்ற அரசர் பெருமான் புகழ்ச் சோழனாரது மனநிலை ஈண்டு வைத்துக் காணற்பாலது.