பாடல் எண் :3668

இறைஞ்சுதலு முன்னிறைஞ்சி "என்னுரிமைத் தொழிற்கடுத்த
திறம்புரிவே னதற்கென்னோ தீங்"கென்ன வாங்கவர்க்கு
நிறைந்தநிதிக் குவைகளுட னீடுவிருத் திகளளித்தே
அறம்புரிசெங் கோலரச னஞ்சலிசெய் துரைக்கின்றான்.
9
3668. (இ-ள்) இறைஞ்சுதலும்....என்ன - அரசன் பணிந்ததும் அதன் முன்பு தாம் இறைஞ்சி எனது உரிமையாகிய படைத்தொழிலுக் கேற்றதாகப் பொருந்திய திறத்தினையே நான் செய்வேன்; அதனால் என்ன தீங்கு வரும்? என்று கூற; ஆங்கு....அளித்தே - அங்கு (அப்பொழுதே)அவருக்கு நிறைந்த நிதியின் குவைகளுடனே நீடுசெல்லும் சர்வ மானியங்களையும் கொடுத்து; அறம்புரி....உரைக்கின்றான் - அறத்தின் வழியே அரசுபுரியும் செங்கோலரசன் அவரைக் கைகூப்பி வணங்கி உரைப்பானாகி.
(வி-ரை) முன்னிறைஞ்சி - முறைமையின் முன்னே பணிந்து.
"என்....தீங்கு" என்ன - இது பரஞ்சோதியார் கூறிய விடை; உரிமைத்தொழிலாகிய படைக்கல விஞ்சைத் திறமும் சேனைத் தலைமையும் ஏற்று அரசர் சேவகத்தில் அணுக்கராய் அமர்ந்தமையால் அதற்கு அடுத்த கடமையாகிய செயலினையே செய்தேனே யன்றி வேறு அடாத எத்தச் செயலினிலும் ஏவப்பெற்றேனில்லை; ஆதலின் தீங்கு ஒன்றும் உம்மைச் சாராது என்றபடி. தீங்கு - தவறு.
ஆங்கவர்க்கு....அளித்தே - ஆங்கு - அப்பொழுதே; நிதிக் குவைகளும் நீடு விருத்திகளும் அளித்தல் - இனி அவர் தமது சீவனத்துக்காக வேறெந்தத் தொழிலையும் எவரிடத்தும் சேவகம் பூண்டு செய்யாது கவலையின்றிச் சேவித்துச் சிவனது சேவகமே செய்து வாழும்பொருட்டு; நீடு விருத்திகள் - சர்வ மான்யமாகிய நிலங்கள்; இறையிலி - முற்றூட்டு என்பர்; நீடு - நிதிக்குவைகள் போல அவ்வப்போது செலவழிந்து விடாதபடி, நிலமாதலின் நீடிச்செல்வது என்றது குறிப்பு; அளித்து - அளியுடன் தந்து என்றது குறிப்பு.
அறம்புரி செங்கோல் அரசன் - பரஞ்சோதியார்க்கு அப்போது மணமாகாத இளவயது (3671); சிறந்த படைக்கலப் பயிற்சியும் ஒப்பற்ற சேனைத் தலைமைத் திறமும் வாய்ந்தவர்; பல போர்களில் வென்று பொருமரசர் தேசங்கள் பல வென்று அரசாங்கத்தினை வளர்த்தார்; வெல்லுதற்கரிய வாதாவித் தொன்னகரத்தைத் துகளாக்கிப் பகைவனை வென்று அரசனுக்குப் புகழும் பெருமையும் தேடித் தந்தனர்; இவர் இன்னும் பன்னாள் தமது அரசசேவையில் இருந்தால் அரசு சிறந்து ஓங்கும்; அரசசேவையிலிருந்து விடுதி பெறுங்காலம் இன்னும் பல ஆண்டுகள் உண்டு; (இந்நாளினும் 55 வயது அரசாங்க சேவகர்கள் விடுதி பெறுங்காலம் என வகுத்துள்ளதும் கருதுக.) இவையெல்லாம் அறிந்து வைத்தும் அரசன் உலகியல் அரசினும் சிவன்றொண்டே பெரிது என்றும், சிவன்றொண்டரை வணங்கி, அவர் வழியொழுகுவதன்றித் தன்கீழ்ச் சேவகத்தில் வைத்து ஏவல் கொள்ளுதல் அடாத பாவம் என்றும் உண்மை நீதியினை உணர்ந்தானாதலின் அவ்வழி ஒழுகினான் என்பார் அறம்புரி செங்கோல் அரசன் என்று சிறப்பித்தார். செங்கோல் - அரசின் உலகியல் நிலை; அறம்புரி - அரசின் உயர்ந்த தெய்வநிலை. அறம் - சிவனியமமாகிய வேத சிவாகமங்களின் மேலாக முடித்துக் கூறும் சிவ தரும விதிகள் என்ற பொருளில் வந்தது.
உரைக்கின்றான் - சொல்வானாகி, முற்றெச்சம்; உரைக்கின்றானாகி - என - விடை கொடுத்தான் என்று மேல் வரும் பாட்டுடன் முடிக்க.
எதிரிறைஞ்சி - என்பதும் பாடம்