பாடல் எண் :3669

உம்முடைய நிலைமையினை யறியாமற் கொண்டுய்த்தீர்;
எம்முடைய மனக்கருத்துக் கினிதாக விசைந்துமது
மெய்ம்மைபுரி செயல்விளங்க வேண்டியவா றேசரித்துச்
செம்மைநெறித் திருத்தொண்டு செய்யு"மென விடைகொடுத்தான்.
10
(இ-ள்) உம்முடைய....உய்த்தீர் - உமது உண்மை நிலையாகிய திருத்தொண்டின் உறைத்த பண்பினை அறியாதபடி கொண்டு செலுத்தினீர்; எம்முடைய....இசைந்து - இனி எமது மனக்கருத்துக்கு இனிமைபெற இசைந்தருளி; உமது....செய்யும் என - உம்முடைய மெய்ம்மைத் தன்மையிற் செல்கின்ற திருத்தொண்டின் செயல்கள் உலகில் விளங்கும்படி உம் கருத்துக்கு வேண்டியபடியே ஒழுகிச் செம்மைதரும் நெறியாகிய சிவநெறியின் திருத்தொண்டு செய்யும் என்று கூறி; விடைகொடுத்தான் - அவரைத் தன்கீழ் அப்படைத் தொழிலினின்று விடுதலை செய்து விடை கொடுத்தனன்.
(வி-ரை) இது அரசன் கூறிய முடிவும் தீர்ப்பும் ஆகும். பரஞ்சோதியார், தமது உரிமைத் தொழிலின் கடமையே செய்தேன், அதனிற் றீங்கில்லை என்று கூறியதனை அரசன் ஏற்றுக் கொள்ளவில்லை. உலகியற் கடமைகளினியல் வேறு; சிவனடிமைத்திறத்தின் பண்பு வேறு; பின்னையது அதனினும் சிறந்தது; மேலாய்க்கொண்டுய்க்கத் தகுந்தது. அரசியல், மக்களின் உடம்பின் நன்மைகளையே கருதி அதனோடொழிவது; சிவனியலாகிய பண்பு அதனின் மேம்பட்ட உயிரின் நன்மை பற்றியது என்பதாம்.
உம்முடைய....உய்த்தீர் - நிலைமை - உயர்ந்த நிலை; அறியாமை - பிறர் அறியாத வண்ணம். உய்த்தல் - செலுத்துதல்; அறியாமற் கொண்டுய்த்தோம் என்ற பாடம் சிறப்பின்று. சிவன் திருத்தொண்டு, அன்பினாலே சிவனும் உயிருமே அறியச் செய்வதன்றி, உலகரறிய ஆரவாரமாகச் செய்வதன்று என்பது சிறந்த ஒழுக்கமாம்.
எம்முடைய....இசைந்து - இதனை நீர் மறுக்கலாகாது என்று அரசன் வேண்டியபடி.
மெய்ம்மை புரி உமது செயல் - என்க; மெய்ம்மை புரி - மெய்யாகிய (சத்) இறைவர்பாற் செய்யும் அன்பின் றிறங்கள். வேண்டியவாறே சரித்து - அன்பின்றிறம் வெளிப்பாடாகும் நிலைகளும், அதுபற்றி மேற்கொள்ளும் செயல்களும் பலவாதலின் அவற்றுள் உமது கருத்துக்கிசையுமாறு வேண்டியவாறே என்பது; சரித்தல் - உலகத்தில் ஒழுகி வாழ்தல். இஃது உலகியல் பற்றியது. இசைந்து - உய்த்தீர் - என்று கூட்டியுரைக்கவும் நின்றது.
செம்மை நெறி....செய்யும் - இஃது உயிரினியல் பற்றி அரசன் கொண்ட விருப்பம். செம்மை - சிவத்தன்மை.
விடைகொடுத்தான் - விடை - அரச சேவையினின்றும் விடுதி.
இசையுமிது - என்பதும் பாடம்.