பாடல் எண் :3670

மன்னவனை விடைகொண்டு தம்பதியில் வந்தடைந்து
பண்னுபுகழ்ப் பரஞ்சோதி யார்தாமும் பனிமதிவாழ்
சென்னியரைக் கணபதீச் சரத்திறைஞ்சித் திருத்தொண்டு
முன்னைநிலை மையின்வழுவா முறையன்பிற் செய்கின்றார்,
11
(இ-ள்) மன்னவனை....அடைந்து - அரசனை விடை கொண்டு தமது பதியின்கண் வந்து சேர்ந்து; பன்னும்....இறைஞ்சி - எடுத்துச் சொல்லப் பெறும் புகழினையுடைய பரஞ்சோதியாரும் குளிர்ச்சியுடைய சந்திரனைச் சூடிய சிரத்தினை உடைய இறைவரைக் கணபதீச் சரத்திலே வணங்கி; திருத்தொண்டு....செய்கின்றார் - திருத்தொண்டினை முன்னை நிலைமையினின்றும் வழுவாமல் முறைப்படி அன்பினாற் செய்கின்றாராய்;
வி-ரை) தம்பதியில் வந்து அடைந்து - அரசனது நகரத்தினின்றும் தமது பதியாகிய திருச் செங்காட்டங்குடியில் வந்து என்க. அரசன் தலை நகரம் காஞ்சிபுரமென்பது சரித ஆராய்ச்சியாளராற் கருதப்படுகின்றது.
பனிமதிவாழ் சென்னியரைக் கணபதீச்சரத் திறைஞ்சி - பனிமதிவாழ் சென்னியர் - சிவபெருமான். அவரைக் கணபதீச்சரத்தில் இறைஞ்சி என்றது அவரை எங்கும் எவ்விடத்தும் எப்பொருளிலும் வணங்கலாம்; "எவனுக்கு முற்றும் வடிவங்களாகும்" (காஞ்சிப்புரா) என்பது கேனோபநிடதம்; இங்கு அவரைக் கணபதீச்சரத் திருக்கோயிலிற் கண்டு வணங்கி; கணபதீச்சரம் என்பது திருச்செங்காட்டங்குடித் திருக்கோயிலின் பெயர். "கன்னவிறோட் சிறுத்தொண்டன் (உடைய) கணபதீச் சரமேய, இன்னமுதன்" (பிள்.தேவா); விநாயக மூர்த்தி கயமுகாசுரனைக் கொன்றபோது இரத்த வெள்ளம் பெருகிய காரணத்தால் திருச்செங்காட்டங்குடி என்ற ஊர்ப்பெயரும், அப்போது கணபதியினாற் சிவலிங்கம் தாபிக்கப்பட்டமையால் கணபதீச்சரம் என்ற கோயிலின் பெயரும் போந்தன. (கந்தபுராணம் - கயமுகனுற்பத்திப் படலம்); ".....இபமுகத் தவுணன் மார்பி, னீடிய குருதிச் செந்நீர் நீத்தமா யொழுகும் வேலைப், பாடுற வருங்கா னொன்றிற் பரத்தலினதுவே செய்ய காடெனப் பெயர்பெற்று" (250); "மீண்டுசெங் காட்டிலோர்சார் மேவிமெய்ஞ் ஞானத் தும்பர், தாண்டவம் புரியுந் தாதை தன்னுருத்தாபித் தேத்திப், பூண்டபே ரன்பிற் பூசை புரிந்தனன் புவியு னோர்க்குக், காண்டகு மனைய தானங் கணபதீச் சரம தென்பர்" (மேற்படி 264).
முன்னை நிலைமையின் - முன்னை - அரசன்பால் படைத்தொழிலில் அமர்ந்து சென்றதன்முன்; 3663 - 3664 -பார்க்க. முன்னை நிலைமையின் - என்றது முன்னைப் பிறவியிற் செய்த தவ நிலைமை காரணமாக என்ற குறிப்பும் தருவதாம்.
முறை - சிவாகம விதிமுறை.
செய்கின்றார் - முற்றெச்சம்; செய்கின்றாராகித் - நிலை நிற்பாருமாகித் (3671), தூய - தொழிற்றலை நின்றார் (3672) என்று வரும் பாட்டுக்களுடன் முடிக்க.
பனிமதி - சிவனை அடைவதன் முன்னே முனி சாபத்தாற் றுளங்கிய மதி என்றலுமாம். பனித்தல் - துளங்குதல் -நடுங்குதல்.