நறையிதழித் திருமுடியா ரடியாரை நாடோறும் முறைமையினிற் றிருவமுது முன்னூட்டிப் பின்னுண்ணும் நிறையுடைய பெருவிருப்பா னியதியா கக்கொள்ளுந் துறைவழுவா வகையொழுகுந் தூயதொழிற் றலைநின்றார். | 13 | (இ-ள்) நறையிதழி....அடியாரை - தேன்பொருந்திய கொன்றைமாலையைச் சூடிய திருமுடியினையுடைய சிவபெருமானது அடியார்களை; நாடோறும்....துறை - நூல்விதிப்படி நாடோறும் முறைப்படி முன்னே திருவமுதூட்டிப் பின்னே தாம் உண்ணுதலாகிய நிறைவுடைய பெரிய விருப்பத்தினாலே அதனை நியதியாகிய நியமமாகக் கொண்டு ஒழுகும் துறையினில்; வழுவா....தலைநின்றார் - தவறாமல் ஒழுகுவதாகிய தூய்மையுடைய தொழிலிற் சிறந்து விளங்கினார். (வி-ரை) நாடோறும் அடியாரைத் திருஅமுது முன் ஊட்டிப் பின் உண்ணும் - நியதி - அடியார்க்கு அமுதூட்டியபின்பே தாம் உணவு கொள்வதாகியநித்த நியமத்தினை நியதியாகக் கொள்வது; சாக்கியனார் சிவலிங்கங் கண்டுண்ணும் நியதி கைக்கொண்டனர். இங்கு நாயனார் சிவனடியாரை முன்னூட்டிப் பின் உண்ணும் நியதியைக் கொண்டனர். ஈரிடத்தும் ஒப்ப இந்நியதியே சரித விளைவுக்குக் காரணமாய் வீடுபேறளித்த நிலை கண்டு கொள்ளத்தக்கது. திருவமுது என்றார் அடியார்களேயின்றி அரனும் உள்நின்று அமுதுண்கின்றாராதல் குறிக்க. பின்னர் அரனே அவ்வமுதுண்ண வருதலும் குறிப்பு. துறை - நெறி - ஒழுக்கம். தூயதொழில் - தூய்மை செய்து உதவும் தொழில்; தூய்மை செய்தலாவது பாசம் போக்குதல். இம்மூன்று பாட்டுக்களானும் சிவன் பணி முதலிற் கூறி, அதன் பின் அடியார் பணிக்காக மனையறம் பூண்ட நீர்மை கூறி, அதன்பின் அந்த மனையறத்தினின்று செய்த அடியார் பணியினைத் தொடர்ந்து கூறிய பொருத்தம் கண்டு கொள்க. திருவமுதளித்த நிலை வரும் பாட்டிற் கூறுவார். பெருவிருப்பு - என்பதும் பாடம். |
|
|