தூயதிரு வமுதுகனி கன்னலறு சுவைக்கறிநெய் பாயதயிர் பாலினிய பண்ணியமுண் ணீரமுத மேயபடி யாலமுது செய்விக்க விசைந்தடியார் மாயிருஞா லம்போற்ற வருமிவர்பான் மனமகிழ்ந்தார். | 14 | (இ-ள்) தூய....உண்ணீர் அமுதம் - தூய்மையாகிய திருவமுதும், கனி வகையும், சர்க்கரையும், ஆறு சுவைகளையுடைய கறி வகைகளும், நெய்யும், உறைந்த தயிரும், பாலும், இனிய பலகாரங்களும், அமுதம் போன்ற உண்ணீரும் ஆகிய இவைகளை; மேய....செய்விக்க - பொருந்தியவாற்றால் திரு அமுது செய்விக்க; இசைந்து....மகிழ்ந்தார் - அதற்கிசைந்து அடியார்கள் வந்து அமுதுண்டு பெரிய உலகம் போற்றவரும் இவரிடத்து மனமகிழ்ச்சி கொண்டார்கள். (வி-ரை) தூய....உண்ணீரமுதம் - உரியவாறு திருவமுது அமைக்க வேண்டிய பகுதிகளைக் குறித்தவாறு. அரசர்பாற் சிறந்த சேனைத்தலைவராயும் பேரன் புடையராயு மிருந்தாராதலின் பரஞ்சோதியார் ஒன்றும் குறைபாடின்றி இவ்வெல்லாவற்றானும் அமைத்தூட்டினார் என்பார் இவ்வாறு விரித்துக் கூறினார்; ""உண்டி நாலு விதத்தி லாறு சுவைத்தி றத்தினில்" (443) எனப் பொதுவகையால் முன்கூறியதனை ஈண்டு இடநோக்கி விரித்துரைத்தபடி; இதனை வற்புறுத்தி உபதேசிக்கும் வகையாலும் விரித்துக்காட்டும் வகையாலும், கூறினார். "அன்று முத னாடோறு நாடோறு மண்ண லடியரள விறந்தபெயர் வந்தவர்க ளெல்லாஞ், சென்றுறையத் திருமடங்க டிருமடங்க டோறுந் திருவிளக்கங் கவர்சாத்த வுள்ளுடைமேற் போர்வை, துன்னியசெந் நெலினடிசில் கன்னனறுங் கனிக யேவறு சுவைக்கறிநெய் தயிர் திரண்ட பாறேன், நன்றுதிருப் பண்ணியந்தண்ணீரமுத மடைக்காய் நரபதியே வலினமைச்சர் நாடோறு நடத்த" (புராண வரலாறு - 72) என்று உமாபதியார் இதனை எடுத்துக் கூறுதல் காண்க. திருவமுது - செந்நெல்லின் அடிசில்; பால் - திரட்டிக்காய்ச்சிய பால்; உண்ணீர் அமுதம் - உண்பதற்கு (தாகத்திற்குக் குடிப்பதற்கு) வேறாகப் பக்குவப்படுத்திய நீர்; இது மிக முக்கியமாகக் கவனிக்கத்தக்க தொன்றென்பார் நீர்அமுதம் என்றடை மொழி புணர்த்தி ஓதினார்; "வெயிலின்வைத் தாற்றிய தண்ணீர் நாற்றமிட் டிருப்ப" என்பர் பட்டினத்தடிகள்; உண்ணல் என்னும் பொது வினை ஈண்டுப் பருகுதலைக் குறித்தது; பாய தயிர் - பிரையிட்டுக் கட்டியாக்கிய தயிர். இவை நியமமாக நாடோறும் செய்யும் வகை. இதன்மேல் அடியார்கள் வேண்டியவாறு செய்தல் வேறு சிறப்புவகை; அதனை இந்நாயனார் சரிதத்துள் மேற் கண்டுகொள்க. மாயிரு ஞாலம் - மா - இரு - ஒருபொருட் பன்மொழி; மிகுதி குறித்தது. மேயபடி - மிசைந்தடியார் - என்பனவும் பாடங்கள். |
|
|