பாடல் எண் :3674

சீதமதி யரவினுடன் செஞ்சடைமேற் செறிவித்த
நாதனடி யார்தம்மை நயப்பாட்டு வழிபாட்டான்
மேதகையா ரவர்முன்பு மிகச்சிறிய ராயடைந்தார்
ஆதலினாற் சிறுத்தொண்ட ரெனநிகழ்ந்தா ரவனியின்மேல்.
15
(இ-ள்) சீதமதி....தம்மை - குளிர்ந்த சந்திரனைப் பாம்பினுடனே சிவந்த சடையின்மேல் நெருங்கும்படி வைத்த சிவபெருமானது அடியார்களுக்கு; நயப்பாட்டு வழிபாட்டால் - விருப்பத்துடன் செய்யும் வழிபாட்டு வகையினாலே; மேதகையார்...அடைந்தார் - மேன்மையுடையோராகிய அவ்வடியார்களின் முன்பு தம்மை மிகவும் சிறியாராய் வைத்து, அடைந்து, ஒழுகிவந்தனர்; ஆதலினால்....அவனியின் மேல் - ஆதலாலே சிறுத்தொண்டர் என்ற பெயருடனே உலகில் நிகழ்வதாயினர்.
(வி-ரை) இந்நாயனாரது இயற்பெயர் பரஞ்சோதியா ரென்றிருப்பவும், ("பலர்ப்புகழுந் திருநாமம் பரஞ்சோதியா ரென்பார்" - 3661) சிறுத்தொண்டர் என்றே உலகில் வழங்கவும், திருத்தொண்டத் தொகையினுள் போற்றப்படவும் போந்த காரணங் கூறியவாறு; காரணம் பற்றிய பெயராதலானும், சிறப்புடைமையானும், நாயனாரது விருப்பத்துக் கிணங்கிய பெயராதலானும் இயற்பெயரினும், இதுவே உலகிற் பெரியோர்பால் வழங்கலாயிற்று என்க.
அடியார் தம்மை நயப்பாட்டு வழிபாட்டால் - நயப்பாடு - நயப்பு - விருப்பம்; தம்மை - தமக்கு; வேற்றுமை உருபு மயக்கம். தம்பாற் செய்யும் என ஏழனுருபாகக் கொள்ளலுமாம். வழிபாட்டால் - வழிபடும் வகையால்; வழிபாட்டால் -அடைந்தார் - என்று கூட்டுக.
மேதகையார் - மேதகைமை - மேம்பாடு; சிவனடியாராதலே மேம்பாடென்பது; திருக்கூட்டச் சிறப்புப் பார்க்க.
அவர்முன்பு மிகச்சிறியரா யடைந்தார் - அடியார்களது பெருமையின் முன்பு தம்மை மிகச்சிறிய ராகவே கண்டு அடைந்து ஒழுகினார்; அடியார்களைக் காணுந்தோறும் இவர்களது பெருமை எங்கே! அடியேனது சிறுமை எங்கே! இவர் கருணையினால் தமது பெருமைபாராது சிறியேனைஆட்கொள்ள எழுந்தருளினார் என எண்ணி அதற்குத்தக வொழுகுதல் இதன் தன்மை; "எத்தனையு மரியநீ யெளியை யானாய்! எளியேனை வந்திரங்கி யேன்று கொண்டாய்....இத்தனையு மெம்பரமோ! ஐய! ஐயோ! எம்பெருமான் றிருக்கருணை யிருந்த வாறே" (அரசு. தேவா) என்பது இவ்வியல்பினைக் காட்டுவதாம்.
அவனியின்மேல் - உலகில்; மேல் - உயர்வாக; உயர்ந்தோரிடத்து என்ற குறிப்புமாம்; "பூதி யணிசா தனத்தவர்முன் போற்றப் போதே னாயிடினும், நாதனடியார் கருணையினா லருளிச் செய்வர் நான்என்று" (3704) என்று பின்னர் நாயனார் திருவாக்கிற் கூறுதல் காண்க.