பாடல் எண் :3676

நீராருஞ் சடைமுடியா ரருளினா னிறைதவத்துப்
பேராள ரவர்தமக்குப் பெருகுதிரு மனையறத்தின்
வேராகி விளங்குதிரு வெண்காட்டு நங்கைபாற்
சீராள தேவரெனுந் திருமைந்த ரவதரித்தார்.
17
(இ-ள்) நீராரும்....அருளினால் - கங்கையாறு பொருந்திய சடையினையுடைய சிவபெருமானது திருவருளினாலே; நிறைதவத்து.... நங்கைபால் - நிறை தவத்தினை உடைய அவருக்குப் (சிறுத்தொண்டருக்கு) பெருகும் சிறந்த இல்லறத்தின் வேராகி விளங்கும் திருவெண்காட்டு நங்கை என்னும் மனைவியாரது மணிவயிற்றினிடமாக; சீராள தேவரெனும்....அவதரித்தார் - சீராள தேவர் என்னும் திருமகனார் வந்தவதரித் தருளினர்.
(வி-ரை) அருளினால் - மைந்தர் அவதரித்தார் - என்க. "கூத்தனாரருனாலே....பெண் கொடியைப் பெற்றெடுத்தார்" (876) என்றது காண்க; அருளினால் - சிவன் பணியும், அடியாரை அமுதூட்டிய பணியும் கூடச் சிவனருள் சுரந்தமையால் என்க. "அடியார்க் குரிய வர்ச்சனை யுலப்பில் செய்த" (2938).
நிறைதவத்துப் பேராளர் - தவம் - அரன்பூசையும் அடியார் பூசையும்; நிறைதவம் - அவரது தவம் இம் மகப் பேற்றினாலே நிறைவெய்த உள்ளது என்ற குறிப்புப்பெற இவ்வாற்றால் உரைத்தமை காண்க. பேராளர் - பெரியவர்; தவம் நிறைதற் கேதுவாகிய அடியார் பூசை; சிறுத்தொண்டர் என்ற காரணப் பெயரினைப் பூண்டவர் என்றலுமாம். பேர் - புகழுமாம்.
திருமனையறத்தின் வேராகி - மனையறமாகிய தாவரத்துக்கு மனைக்கிழத்தியாரே வேர் போன்றவர் என்பது; இவர்களது இல்லறச் சிறப்பும் மேல் வரும் சரித நிகழ்ச்சிக் குறிப்புமாம். "கருத்தொன்ற வரும்பெருமை நீதிமனை யறம் புரியும்" (3671). பெரும்திரு - பேரழகு பொருந்திய என்றலுமாம். வேர் - மூலம்;
அவர்தமக்கு - நங்கைபால் - மைந்தர் - அவதரித்தார் என்று தந்தையர் தாயர் இருவரையும் உடன்கூறியது இருவர் அன்பும் ஒருமித்துப் பின் நிகழும் சரிதக் குறிப்புப் பெறுதற்கு; "தொண்டர் மனைவியார் நீடு மகனார்" (3746) என்று இறுதியில் ஒன்றுசேர்த்துக் கூறும் திறமும் காண்க.
சீராளதேவரெனுந் திருமைந்தர் - சிறந்த இச் சரித விளைவுக்கு மூலமாய், இறைவர் தாமே விரும்பிய பண்டமெனச் சொல்லப்பெறும் பேறுபெற்றவராய், "சீராளன் சிறுத்தொண்டன்" என்று ஆளுடைய பிள்ளையாரது மறைத் திருவாக்கினிற் பிறக்கும் பேறுடையவராய் (3682), முருகப் பெருமானுடன் வந்து இறைவர் ஆட்கொள்ளும் தனிச் சிறப்புடைய பேறுபெறுபவராய் உள்ள பெருமைகள் எல்லாம் குறிக்க இங்கு இவ்வாறு அருமைபெறக் கூறினார். பின்னரும், "நீடு மகனார்" என்பது காண்க.