அருமையினிற் றனிப்புதல்வர் பிறந்தபொழு தலங்கரித்த பெருமையினிற் கிளைகளிப்பப் பெறற்கரிய மணிபெற்று வருமகிழ்ச்சி தாதையார் மனத்தடங்கா வகைவளரத் திருமலிநெய் யாடல்விழாச் செங்காட்டங் குடியெடுப்ப. | 18 | (இ-ள்) அருமையினில்....பொழுது; அருமையாக ஒப்பற்ற மகனார் பிறந்த பொழுது; அலங்கரித்த....களிப்ப -அலங்காரங்கள் செய்து அப்பெருமையினால் சுற்றத்தார்கள் களிப்புற; பெறற்கரிய....வளர - பெறுதற்கரிய நாயனார் மனத்துள்ளே அடங்காத வகை மேலோங்கி வளர; திருமலி....எடுப்ப - சிறப்பு மிக்க நெய்யாடல் விழாவைத் திருச்செங்காட்டங்குடியில் உள்ளோர் எல்லவரும் செய்து கொண்டாட, (வி-ரை) இந்த இரண்டு பாட்டுக்களாலும் சீராள தேவரது திருஅவதாரத்தில் நிகழ்ந்த மகிழ்ச்சிச் செயல்களும் சடங்குகளும் கூறப்பட்டன. அலங்கரித்த....கிளைகளிப்ப - மனை அலங்காரங்கள் முதலியவை செய்து மகிழ்ந்தனர் கிளைஞர்கள் என்க. பெறற்கரிய வளர - தந்தையார் பெறற்கரிய மகனைப் பெற்றதனால் மகிழ்ந்தார் என்க. மணி - மணிபோன்ற மகவு; "இந் நடைமணியைத் தந்தபின்னர்" (திருக்கோவை - 385); பெற்று - பெறுதலால்; பெறற்கரிய - என்றது பிறந்த பொழுதே சோதிடம், உடற்கூற்று இலக்கண நூல் முதலிய அளவைகளால் கண்டு அறிந்தவாறு அம்மகவின் அருமை குறித்தது. நெய்யாடல் விழா - நன்மகப் பேற்றில் அயலோர் செய்வதொரு மகிழ்ச்சிச் சடங்கு. "மீதணியு நெய்யணி விழாவொடு திளைப்பார்" (1933) என்று ஆளுடைய பிள்ளையார் திருவவதாரத்துக் கூறுதல் காண்க. எண்ணெயாடர் விழா என்பாரு முண்டு. அலங்கரித்த பெருமை - என்பதற்கு இவ்வாறன்றி, அம்மகப்பேறு அந்த மனைவாழ்க்கையை அணிகலம் போன்று அலங்கரித்த மேன்மையால் என்று உரைத்து, "மற்றத னன்கல நன்மக்கட் பேறு" (குறள்) என் றுதகரிப்பாருமுண்டு. அலங்கரித்து - மகப்பெற்று - என்பனவும் பாடங்கள். |
|
|