மங்கலநல் லியமுழக்க மறைமுழக்கம் வானளப்ப அங்கணர்தஞ் சீரடியார்க் களவிறந்த நிதியளித்துத் தங்கண்மர பினிலுரிமைச் சடங்குதச தினத்தினிலும் பொங்குபெரு மகிழ்ச்சியுடன் புரிந்துகாப் பணிபுனைந்தார். | 19 | (இ-ள்) மங்கல....வானளப்ப - மங்கலமாகிய நல்ல இயங்களின் முழக்கமும் மறைகளின் முழக்கமும் வானின் ஓங்க; அங்கணர்தம்....அளித்து - இறைவருடைய சிறப்புடைய அடியார்களுக்கு அளவில்லாத நிதிகளைக் கொடுத்து; தங்கள்....புரிந்து - தங்கள் குல மரபினுக்கு உரிமையாகிய சடங்குகளைப் பத்துநாட்களிலும் மேன்மேல் அதிகரிக்கும் மகிழ்ச்சியுடனே புரிந்து; காப்பு அணிபுனைந்தார் - காப்புச் சாத்தினர். (வி-ரை) மங்கல....அளப்ப - மங்கல இயங்கள் முழக்குதலும், வேதமந்திரங்களை ஓதி வாழ்த்துதலும் மகப்பேற்றின் மகிழ்ச்சிச் செயல்கள். மறை முழக்கம் - மாமாத்திரர் என்ற இவரது குலம் அந்தணர்க்கும் அரசர்க்கும் இடையில் வைத்து ஒருசார் வேத மந்திரச் சடங்குகளுக்கு உரியாராதல் பெறக் கூறியவாறு. பிறர் உச்சரிக்காமலே தாமாகவே முழங்கிய மறைகளின் முழக்கம் என்றலும் குறிப்பு; இருவகை முழக்கங்களையும் சேர்த்துக் கூறியதனால் இரண்டும் தாமாகவே முழங்கின என்றலுமாம். "எங்கணு மியற்றுபவ ரின்றியு மியம்பு, மங்கல முழக்கொலி மலிந்தமறு கெல்லாம்" (1931); "ஓவா, வேதமொழி யாலொலி விளங்கியெழு மெங்கும்" (1929) என்றவையும், பிறவும் காண்க. வான் அளப்ப - வான் அளவும் ஓங்க; பெருமையினாலும் வானையும் தம்முட்பட மேலோங்கி அளவுபடுத்தி நிற்க. அங்கணர்தம்....நிதியளித்து - இஃது இச்சடங்கிற் செய்த சிறந்த செயலாம்; நாயனாரது அன்பின் மேன்மை காட்டுவது; சிறந்த பயன் தருவது. இதனை ஏனை உலகவரும் கைக்கொண்டொழுகுதல் பயன்றரும். மரபினில் உரிமைச் சடங்கு - தமது குலமரபுக்கு உரிய விதிச் சடங்குகள்; தசதினத்தினிலும் பிறவி, யிறவிகளில் பத்துநாட் சடங்குக்குரிய மரபு என்பது; இவற்றிற் பதினாறுநாட் சடங்குக் குரிய வேறு குலங்களுமுண்மை நூல்களுட் காண்க. "தூயதிரு மாமறை தொடர்ந்தநடை நூலின், மேயவிதி யையிரு தினத்திலும் விளைத்தார்" (1938) என்றது காண்க. இவை "சாதக முறைப்பல சடங்கு" என்ப. ஆளுடைய பிள்ளையார் புராணம் பார்க்க. காப்பணி - திருநீற்றுக்காப்பு. வேறு உலகர் கொள்ளும் காவல் முறைகளும் உடன் கொள்ளலாம். |
|
|